Published : 13 Feb 2016 03:24 PM
Last Updated : 13 Feb 2016 03:24 PM
தேர்தலில் அதிமுக, திமுகவுக்கு சத்துணவு ஊழியர்கள் வாக்களிக்கமாட்டார்கள் என்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்க மாநிலத் தலைவர் கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவையில் ‘தி இந்து’ செய்தியாளரிடம் பழனிச்சாமி கூறியதாவது:
தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்கள் நடத்தி கைதாகி வருகின்றனர். அவர்களில், அதிகமாக கைதாவது சத்துணவு ஊழியர்கள்தான்.
கடந்த 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை தமிழகம் முழுக்க 3.50 லட்சம் சத்துணவு ஊழியர்கள் கைதாகியுள்ளனர். திங்கள்கிழமை 1.80 லட்சம் பேர் பங்கேற்கவுள்ளனர்.
சத்துணவு அமைப்பாளருக்கு அடிப்படை ஊதியம் ரூ.5,200, உதவியாளர்களுக்கு ரூ.4500 அளித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதே முக்கியக் கோரிக்கை. அப்போது, ஒவ்வொருவரும் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை சம்பளம் பெறுவார்கள். ஆனால், அமைப்பாளர்களுக்கு ரூ.9,500, சமையல் உதவியாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் மட்டும் அளிக்கப்படுகிறது. ஓய்வூதியம் ரூ.1000, நஷ்ட ஈடு ரூ.50 ஆயிரம், ரூ.20 ஆயிரம் என அளிக்கப்படு| கிறது. சட்டப்படி, எந்தத் துறையாக இருந்தாலும் அந்தப் பணியாளர் ஓய்வுபெறும்போது கடைசியாக பெற்ற சம்பளத்தை கணக்கிட்டு 16.5 மாத சம்பளம் தர வேண்டும். அப்படி கணக்கிட்டுக் கொடுத்தால் கூட ஒருவருக்கு தலா ரூ.1.47 லட்சம் கிடைக்கும்.
அதேபோல், அரசு முதியோர் பென்சன் ரூ.1000, சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் ரூ.1000 அளிக்கப்படுகிறது. 30-40 வருடம் அரசுத் துறையில் பணியாற்றியவருக்கு முதியோர் பென்சன் குறைந்தபட்சம் ரூ.3,500 வழங்கக் கோருகிறோம்.
கடந்த திமுக ஆட்சியில் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வில்லை. அதிமுக தேர்தல் அறிக்கை யிலும், சத்துணவு ஊழியர்கள் குறைகள் களையப்படும். ஊதியம், ஓய்வூதியத்துக்குத் தீர்வு காணப்படும் என்று அறிவித்திருந்தனர். அதை நம்பி, சங்கத்தைச் சேர்ந்த சத்துணவு ஊழியர்கள் அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்தனர். எங்களது ஆதரவைக் கேட்டு அதிமுக பொதுச் செயலாளர் கடிதமும் அனுப்பினார். அதில் மகிழ்ச்சியடைந்து, சுமார் 5 லட்சம் வாக்குகள் அதிமுகவுக்குப் பதிவு செய்யப்பட்டது என்று உறுதியாகக் கூற முடியும்.
ஆனால், ஆட்சிக்கு வந்த பின்பு எங்களை மறந்துவிட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை போராட்டங்கள் நடந்துள்ளன. மூத்த அமைச்சர்கள் எங்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இவர்களிடம் எந்த நியாயமும் கிடைக்கப் போவதில்லை. எனவேதான், இந்தப் போராட்டத்தை திங்கள்கிழமை முதல் தீவிரப்படுத்த உள்ளோம்.
இந்த முறை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடப்போவது இல்லை. எங்களை ஏமாற்றிய திமுக, அதிமுகவுக்கு வாக்களிப்பது இல்லை என்று முடிவு எடுத்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT