Published : 03 Jul 2021 03:12 AM
Last Updated : 03 Jul 2021 03:12 AM
சென்னிமலையை அடுத்த கொடுமணல் பகுதியில் நடந்த அகழாய்வில், 2,300 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் பயன்படுத்திய படிக்கட்டுடன் கூடிய கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கொடுமணல் கிராமத்தில், தமிழக தொல்லியல் துறை திட்ட இயக்குநர் ஜெ.ரஞ்சித் தலைமையிலான குழுவினர் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் முதல் 8-வது அகழாய்வு பணியைத் தொடங்கினர். கரோனா பரவலால் அகழாய்வுப் பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில், உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் 10 நாட்களுக்கு முன்னர் கொடுமணலில் மீண்டும் அகழாய்வு பணியைத் தொடங்கினர்.
அகழாய்வு குறித்து தொல்லியல்துறை திட்ட இயக்குநர் ஜெ.ரஞ்சித் கூறியதாவது:
கொடுமணல் பகுதியில் நடந்த அகழாய்வில் 3 வகையான பெருங்கற்கால ஈமச்சின்னம் எனப்படும் கல்லறைகளை கண்டு பிடித்துள்ளோம். இதில் ஒரு கல்லறையில் மனிதனின் மண்டை ஓடு உள்ளது. இதனை டி.என்.ஏ சோதனை செய்ய, மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போதைய ஆய்வில் படிக்கட்டுகளுடன் கூடிய கிணறு கண்டறியப்பட்டுள்ளது. இந்த கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்காக 2 திசைகளில் இருந்து செல்லும் வகையில் படிக்கட்டுகளை அமைத்துள்ளனர்.
அந்த கிணற்றை 10 மீட்டர் நீள, அகலத்தில் 2.36 மீட்டர் ஆழத்தில் பாறைகளை குடைந்து தோண்டியுள்ளனர். இந்த கிணற்றை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைத்துள்ளனர்.
கொடுமணல் பகுதியில் நடந்த தற்போதைய அகழாய்வில் 662 உடைந்த பல வகையான வளையல்களும், முழுமையான பலவகையான 343 கல்மணிகளும், இரும்பு, கண்ணாடி, ஆணிகள், உளி, கத்தி போன்ற இரும்பினால் தயார் செய்த 193 பொருட்களும், பல வண்ணங்களில் 103 சிறிய ஓடுகளும், தாமிரத்தால் தயாரான 28 பலவகை பொருட்கள் மற்றும் 15 நாணயங்கள் என மொத்தம் 1,535 பொருட்களைக் கண்டுபிடித்துள்ளோம்.
இந்த பழங்கால பொருட்கள் அனைத்தும் சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்த போது பயன்படுத்தப்பட்டதாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT