Published : 21 Feb 2016 03:01 PM
Last Updated : 21 Feb 2016 03:01 PM
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாலியல் புகாருக்கு ஆளான உதவி பேராசிரியரை மீண்டும் பணியில் சேர்க்க, பல்கலைக்கழக ஆட்சிக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், மாணவிகள் அதிர்ச்சியடைந்துள் ளனர்.
இப்பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் வினோத் வின்சென்ட் ராஜேஷ் மீது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மாணவிகள் சிலர் பாலியல் புகார் தெரிவித்திருந்தனர். அப்பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பல்கலைக்கழக வளாகத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகளும், அவர்களுக்கு ஆதரவாக பிற மாணவர்களும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புகார் தொடர்பாக விசாரிக்க பல்கலைக்கழக நிர்வாகம் கமிட்டி ஒன்றை அமைத்தது. இந்த கமிட்டி முன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13, 14-ம் தேதிகளில் பாதிக்கப்பட்ட மாணவிகள் ஆஜராகி தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை ஆதாரப்பூர்வமாக தெரிவித்தனர்.
கமிட்டியின் அறிக்கை, பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக் குழு மூலம் சட்ட ஆலோசகரிடம் அளிக்கப்பட்டது. அந்த உதவிப் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க சட்ட ஆலோசகர் பரிந்துரை செய்திருந்தார். இதையடுத்து சம்பந்தப்பட்ட உதவி பேராசிரியர் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மீண்டும் பணி
இந்நிலையில் கடந்த 1.2.2016-ல் பல்கலைக்கழகத்தில் கூடிய ஆட்சிக் குழு கூட்டத்தில், உதவி பேராசிரியர் வினோத் வின்சென்ட் ராஜேஷை எச்சரித்துவிட்டு, அவர் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து, மீண்டும் அவரை பணியில் சேர்க்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த 6 மாத காலத்தில் அவருக்கான ஊதிய உயர்வை மட்டும் ரத்து செய்யவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பல்கலைக்கழக ஆட்சிக் குழுவில் எடுக்கப்பட்ட இந்த முடிவு பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு தற்போதுதான் தெரியவந்துள்ளது. வரும் 26-ம் தேதிக்குப்பின் உதவி பேராசிரியர் வினோத் வின்சென்ட் ராஜேஷ் மீண்டும் பணியில் சேர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
மாணவிகள் அதிர்ச்சி
பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் வலுப்பெற்று வரும் நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6 மாதத்தில் மீண்டும் வினோத் வின்சென்ட்டை பணியில் சேர்ப்பது பேரதிர்ச்சியாக இருப்பதாக பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் மாநில மகளிர் ஆணையம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இதனால் தேசிய மகளிர் ஆணையத்தை அணுகவுள்ளதாக அந்த மாணவி தெரிவித்தார்.
இறுதி முடிவு எடுக்கப்படவில்லை
மதுரை காமராஜர், மனோன்மணீயம் சுந்தரனார், அன்னை தெரசா, அழகப்பா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கமான மூட்டா அமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.சுப்பாராஜு கூறும்போது,
“இந்த விவகாரம் குறித்து பல்கலைக்கழக ஆட்சிக்குழு மீண்டும் கூடி விவாதிக்க வேண்டும். பாலியல் புகார் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றார்.
பல்கலைக்கழக பதிவாளர் ஜான் டி பிரிட்டோவிடம் கேட்டபோது, “இந்த விவகாரத்தில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை” என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT