Published : 02 Jul 2021 05:32 PM
Last Updated : 02 Jul 2021 05:32 PM

மூன்றாவது அலை பரவும் அபாயம்; ஊரடங்கு அரசின் முடிவு: தலையிட உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை

மூன்றாவது அலை பரவும் அபாய நிலை உள்ளதால் ஊரடங்கு குறித்த அரசின் முடிவில் தலையிட முடியாது, நிபுணர்களை கலந்தே அரசு ஊரடங்கை அமல்படுத்துகிறது. ஆகவே அரசின் முடிவில் தலையிட முடியாது என உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கரோனா இரண்டாவது அலை பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, தற்போது தொற்று தாக்கம் தணிந்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் பேருந்து போக்குவரத்தை மீண்டும் துவங்கக் கோரியும், கோவில்களை திறக்க உத்தரவிடக் கோரியும், மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக இரு பொது நல வழக்குகளை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்குகளை விசாரித்த, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, இதுசம்பந்தமாக மாநில அரசு முடிவெடுக்கும் எனவும், மூன்றாவது அலை அபாயம் உள்ள நிலையில், உடனடியாக இயல்பு நிலைக்கு திரும்ப முடியாது எனவும் தெரிவித்தது.

ஊரடங்கு சில பகுதிகளில் தளர்த்தப்பட்டுள்ள போதும், பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன எனவும் தெரிவித்த நீதிபதிகள், நிபுணர் குழுவுடன் கலந்து ஆலோசித்து கட்டுப்பாடுகளையும், தளர்வுகளையும் அரசு அறிவிக்கிறது என்பதால் அதில் தன்னிச்சையான செயல்பாடு எதுவும் இல்லை எனவும், இந்த விஷயங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் தெளிவுபடுத்தினர்.

சாதாரண மக்களின் இடர்பாறுகளை கருத்தில் கொண்டு அரசு முடிவெடுக்க வேண்டும் எனவும், வாழ்வுரிமை என்று வரும் போது, வழிபடும் உரிமை பின் இருக்கைக்கு சென்று விடும் எனவும் தெரிவித்து, இரு வழக்குகளையும் முடித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x