Published : 02 Jul 2021 05:03 PM
Last Updated : 02 Jul 2021 05:03 PM
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டாரத்தில் 3 ஆசிரியம் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
திருமயம் வட்டாரத்திலுள்ள மலையடிப்பட்டி, மேலப்பனையூர், தேவர் மலை ஆகிய இடங்களில் தொல்லியல் ஆய்வுக் கழகத் தலைவர் கரு.ராஜேந்திரன், நிறுவனர் ஆ.மணிகண்டன் தலைமையிலான குழுவினர் பாதுகாப்புப் பணி ஒப்பந்தத்தை வெளிப்படுத்தும் ஆசிரியம் கல்வெட்டுகளை கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து ஆ.மணிகண்டன் கூறியதாவது:
’’புதுக்கோட்டை மாவட்டத்தில் 13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், நிலையான ஒருங்கிணைந்த ஆட்சி முறை மறையத் தொடங்கிய சூழலில் அதிக நிலம் படைத்தவர்கள் குறுநில மன்னர்களாகச் செயற்பட்டு வந்துள்ளனர். இவர்கள், தமது நிர்வாகத்துக்குட்பட்ட மக்களுக்கும், அவர்களின் உடைமைகளுக்கும், வெளியூரிலிருந்து வணிகம் செய்யும் வணிகர் மற்றும் வணிகப் பொருட்களுக்கும் பாதுகாப்பாளர்களை நியமித்தனர். இத்தகைய, பாதுகாவல் பணியை அறிவிக்கும் 'ஆசிரியம்' கல்வெட்டுகள் திருமயம் வட்டம் தேவர்மலை, மேலப்பனையூர், மலையடிப்பட்டி ஆகிய இடங்களில் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றில், மேலப்பனையூரில் கண்டெடுக்கப்பட்ட 14-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டில் பனையூர் குளமங்கலத்தை நிர்வகிக்கும் உரிமை பெற்றதை அறிவிக்கும் “ஸ்வஸ்தி .ஸ்ரீ மது இராயப்பர் மகந் குமாரந் பாகுய நாயக்கர்க்குப்பனையூர் குளமங்கலம் ஆசிரியம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
திருமயம் வட்டம் மலையடிப்பட்டியில் கண்டெடுக்கப்பட்ட 16-ம் நூற்றாண்டை சேர்ந்த சிதைவுற்ற கல்வெட்டில், கல்வெட்டு நட்டுவிக்கப்பட்டுள்ள பகுதியைப் பாதுகாக்கும் பொறுப்பைப் பெற்றதை அறிவிக்கும் விதமாக “பொன்னமராவதி நாட்டு வடபற்றுச் செவ்வலூர் ஏவவிருத்தரையர்கள் ஆசுரியம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மல்லாங்குடி ஊராட்சிக்குட்பட்ட தேவர்மலை வடபுறம் 2016-ல் கரு.ராஜேந்திரனால் அடையாளம் காணப்பட்ட கல்வெட்டில் கோயில் நிர்வாக உரிமையை பெற்றதற்கான “ஸ்வஸ்தி ஸ்ரீதேவ மலையில் நாயக்கர் நம்பி அகமற மாணிக்கர் ஆசிரியம்” என்ற தகவல் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுகள் 3-ம் ஊரையோ, கோயிலையோ நிர்வகிப்போரை அறிவிக்கும் ஆசிரியம் கல்வெட்டுகள் என்பதை அறிய முடிகிறது.
மேலும், இதுவரை தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 67 கல்வெட்டுகளில் ஆசிரியம், ஆசுரியம், அஸ்ரீயம், ஆஸ்ரயம், ஆச்ரயம் எனப் பல்வேறு சொல்லாடல்கள் இருந்தாலும் எமது ஆய்வில் பட்டியலிடப்பட்ட கல்வெட்டுகளில் 53 கல்வெட்டுகளில் ஆசிரியம் என்ற சொல்லாடலும், 8 கல்வெட்டுகளில் ஆஸ்ரீயம் என்றும், 3 கல்வெட்டுகளில் ஆசுரியம் என்றும் உள்ளது. 3 கல்வெட்டுகளில் மட்டுமே ஆஸ்ரயம் மற்றும் ஆச்ரயம் என்ற சொல்லாடல் கையாளப்பட்டுள்ளது.
எனவே, ஆசிரியம் என்ற தமிழ்ச்சொல் சங்கப் பாடல்களிலும் காணப்படுவதால், இதை சம்ஸ்கிருதச் சொல்லாடலாக மட்டுமே கருதுவது அனைத்துக் கல்வெட்டுகளுக்கும் பொருந்தாது’’.
இவ்வாறு ஆ.மணிகண்டன் தெரிவித்தார்.
ஆய்விப் பணியின்போது, ஆய்வுக்குழு உறுப்பினர்கள் மணிசேகரன், பீர்முகமது, சை.மஸ்தான் பகுருதீன், மு.முத்துக்குமார், பா.ரமேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT