Published : 02 Jul 2021 03:37 PM
Last Updated : 02 Jul 2021 03:37 PM
முதியோர் இல்லங்கள், மகளிர் விடுதிகளை நடத்துபவர்கள், உரிய விதிகளின்படி பதிவு செய்து உரிமம் பெற வேண்டும் என, சமூகநலத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, சமூகநலத்துறை இன்று (ஜூலை 02) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து முதியோர் இல்லங்களும் (கட்டணம்/ கட்டணமில்லா), தனியார் / தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடத்திடும் அனைத்து முதியோர் இல்லங்களும், முதியோர்களுக்கான குத்தகை விடுதிகள் மற்றும் வாடகை விடுதிகளும் 2009-ம் ஆண்டைய தமிழ்நாடு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல விதிகளில், விதி பிரிவு 12(3)-ன் கீழ் 31.07.2021-க்குள் பதிவு செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், அரசாணை (நிலை) எண்.83, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை, நாள் 23.11.2016-ல் வெளியிடப்பட்டுள்ள நெறிமுறைகளின்படி இவ்வில்லங்களை பராமரிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.
மகளிர் விடுதிகள் நடத்தும் தனியார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்கள் விடுதிகளை 2014-ம் ஆண்டைய தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் காப்பகங்கள் (ஒழுங்குமுறைப்படுத்தும்) சட்டத்தின் பிரிவுகள் 3 மற்றும் 4 ஆகியவற்றின்படி விடுதிகள் நடத்துபவர்கள் 31.07.2021-க்குள் உரிமம் பெற்று கட்டாய பதிவு செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.31, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை, நாள் 26.06.2014 மற்றும் அரசாணை (நிலை) எண். 12, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை, நாள் 21.02.2015 ஆகியவற்றில் வெளியிடப்பட்டுள்ள நெறிமுறைகளின்படி இவ்விடுதிகளை பராமரிக்க அறிவுறுத்தப்படுகிறது.
மேற்குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றத் தவறுபவர்கள் மீது சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
இந்நேர்வில், மேலும் விவரங்களுக்கு சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலகத்தினை அணுகலாம் என தெரிவிக்கப்படுகிறது".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT