Published : 02 Jul 2021 02:19 PM
Last Updated : 02 Jul 2021 02:19 PM
மாநில வளர்ச்சிக் கொள்கை குழு தமிழக அரசு செல்லவேண்டிய பாதைக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக திகழ வேண்டும் என்றும் மாநிலத்தின் வளர்ச்சிக்காக நல்வழி காட்டவேண்டும் தமிழகம் இந்தியாவின் தன்னிகரற்ற மாநிலமாக வேண்டும் என மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் முதல் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
“தமிழகத்தின் அனைத்து பகுதிகளும் ஒரே சீரான மேம்பாடு அடைந்த பகுதிகளாக மாற வேண்டும் என்றும் பின்தங்கிய சமூகம், பின்தங்கிய மக்கள் என்று யாரும் இருக்கக்கூடாது என்கிற வகையில் ஐந்து ஆண்டுகள், பத்து ஆண்டுகள் ஆனாலும் கரையாத நிலையான வளர்ச்சியை தமிழகம் அதை நோக்கி அடைய வேண்டும் என்றும் அதற்கான திட்டமிடுதல் ஒவ்வொரு துறையிலும் தேவை என்றும் உரையாற்றினார்.
மேலும் பொருளாதார வளர்ச்சியும், சமூக நலத் திட்டங்களும் ஒன்றுக்கொன்று கைகொடுத்து செயல்பட்டதால்தான் தமிழகம் வளர்ச்சி அடைந்தது என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியா சென் தமிழகம் அடைந்துள்ள வளர்ச்சி குறித்து பாராட்டி உள்ளதையும் முதல்வர் சுட்டிக்காட்டினார்.
தமிழ் நாட்டின் வளர்ச்சி என்பது ஏற்றுமதி இறக்குமதி மட்டுமல்ல, நிதி மூலதனம் அல்ல வளர்ச்சி என்பது அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சியாக இருக்க வேண்டும். மாநில வளர்ச்சி கொள்கை குழு தமிழக அரசு செல்லவேண்டிய பாதைக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக திகழ வேண்டும் என்றும் மாநிலத்தின் வளர்ச்சிக்காக நல்வழி காட்டவேண்டும் என்றும் கூட்டத்தில் முதல்வர் கேட்டுக்கொண்டார். முன்னதாக இக்கூட்டத்தில் வரவேற்றுப் பேசிய மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணைத்தலைவர் ஜெயரஞ்சன் இந்த குழுவின் செயற்பாடுகள் குறித்தும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
இந்தக் கூட்டத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் இறையன்பு, மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் துணைத் தலைவர் ஜெயரஞ்சன், உறுப்பினர்கள் ராம சீனிவாசன், விஜயபாஸ்கர், சுல்தான் அகமது இஸ்மாயில், தீனபந்து, டிஆர்பி.ராஜா, மல்லிகா சீனிவாசன், அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் சிவராமன் மற்றும் நர்த்தகி நடராஜ், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலர் கிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்”.
இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT