Published : 02 Jul 2021 12:45 PM
Last Updated : 02 Jul 2021 12:45 PM
ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் கரோனா தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்துவருகிறது. நேற்று (ஜூலை 01) தமிழகத்தில் 4,481 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் 249 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,044 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட 37,526 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில், பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு வரும் ஜூலை 5-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் தளர்வுகள் குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜூலை 02) தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, பல்வேறு துறையின் செயலாளர்கள், மருத்துவ நிபுணர்கள், காவல்துறை உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் தொற்று பாதிப்புக்கு ஏற்ப மூன்று வகையாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாடு அதிகம் உள்ள மாவட்டங்களில், வரும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்படலாம் எனவும், கடைகள் திறப்பு நேரம் அதிகரிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
மேலும், வகை-1 இல் உள்ள கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பேருந்து சேவை இன்னும் தொடங்கப்படவில்லை. அதற்கு அனுமதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், டீக்கடைகள், உணவகங்களில் 50% வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT