Published : 02 Jul 2021 11:52 AM
Last Updated : 02 Jul 2021 11:52 AM
பழம்பெரும் நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர் அவர்களின் பேரனுக்கு அரசு சார்பில் குறைந்த வாடகைக் குடியிருப்பு மற்றும் நிதியுதவியை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார்.
சாப்பிட தங்கத்தட்டு, சவாரிக்கு வெள்ளைக்குதிரை, மாளிகை வாசம் எனத் திகழ்ந்த தமிழகத்தின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரின் மகள் வயிற்றுப்பேரன் வறுமையில் வாடி வந்தார். தனக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என கடந்தவாரம் அவர் முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளித்திருந்தார். அந்த மனுவை பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின் மறுநாளே அவருக்கு குறைந்த வாடகையில் குடியிருப்பையும், ரூ.5 லட்சம் நிதியுதவியும் வழங்கி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் சாய்ராம் குடும்பத்தினரை நேரில் அழைத்து உதவியை வழங்கினார். இதுகுறித்த தமிழக அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:
“தமிழக முதல்வர் ஸ்டாலின் பழம்பெரும் நடிகரும், கர்நாடக சங்கீத பாடகருமாகத் திகழ்ந்த எம்.கே. தியாகராஜ பாகவதரின் மகள் வழிப்பேரன் சாய்ராம் மற்றும் அவரது குடும்பத்தினர், தற்போது மிகவும் வறிய நிலையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு, அவருக்கு அரசு சார்பில், குறைந்த வாடகையில் சென்னையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு வீடு ஒன்றினையும், முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.
அந்த உத்தரவைச் செயல்படுத்தும் விதமாக, இன்று (2.7.2021) தலைமைச் செயலகத்தில், எம்.கே.தியாகராஜ பாகவதரின் மகள் வழிப்பேரன் சாய்ராம் மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் வரவழைத்து, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில், அவரது குடும்பத்தினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட குடியிருப்பிற்கான ஆணையினையும், 5 லட்சம் ரூபாய் நிதியுதவியினையும் முதல்வர் ஸ்டாலின் நேரில் வழங்கினார். முதல்வருக்கு சாய்ராம் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்”.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT