Published : 02 Jul 2021 11:51 AM
Last Updated : 02 Jul 2021 11:51 AM
ஓஎன்ஜிசி நிறுவன அத்துமீறலை கட்டுப்படுத்தி, கட்டமைப்பு வசதிகளுக்கு பொறுப்பேற்க செய்ய வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (ஜூலை 02) வெளியிட்ட அறிக்கை:
"திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓஎன்ஜிசி நிறுவனம் பல்வேறு இடங்களில் ஆழ்குழாய் மூலம் கச்சா எண்ணெய் எடுத்து வருகின்றது. ஆழ்குழாய் கிணறுகளில் எடுக்கப்படும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்புக்காக, பல மைல் தூரம் விவசாய நிலங்களில் புதைக்கப்பட்ட குழாய் வழியாக எடுத்துச் செல்லப்படுகின்றது.
இந்தக் குழாய் பாதைகளில் அவ்வப்போது வெடிப்பும், உடைப்பும் ஏற்பட்டு, எண்ணெய் வெளியேறி விவசாய நிலங்களையும், பயிர்களையும் சேதப்படுத்தும் சம்பவங்கள் நடைபெறுகின்றன.
அண்மையில், கோட்டூர் அருகில் உள்ள ஆதிச்சபுரம் - நல்லூர் எண்ணெய் குழாய் பாதையில் ஏற்பட்ட உடைப்பால், விளைநிலம் சேதம் ஏற்பட்டு, சட்டம் - ஒழுங்கு பிரச்சினையானது. எண்ணெய் குழாய் பாதைகளை பராமரித்து பாதுகாக்கும் பணியில் ஓஎன்ஜிசி நிறுவனம் அக்கறை காட்டுவதில்லை.
'சமுதாய சேவை' என்கிற பெயரில் சிறு, சிறு அடையாளப் பணிகளை மட்டுமே செய்து வருகிறது.
எண்ணெய் குழாய் அமைத்துள்ள விவசாய நிலங்களின் உரிமையாளர்களுக்கு இதுவரை இழப்பீட்டு தொகை வழங்காமல் இழுத்தடித்து வருகிறது.
பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள காவிரி டெல்டா பகுதியை மேம்படுத்த ஒரு பெரும் திட்டம் வகுத்து செயல்படுத்த வேண்டியது அவசியமாகும்.
இந்த வகையில், ஓஎன்ஜிசி நிறுவனம் மேலும் 15 எண்ணெய் கிணறுகள் அமைக்க கேட்டிருந்த விண்ணப்பங்களை தமிழக அரசு நிராகரித்திருப்பதும் தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, (மயிலாடுதுறை) திருவாரூர், கடலூர், அரியலூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில், ஹைட்ரோகார்பன், மீத்தேன், ஷேல் எரிவாயு எடுக்க அனுமதியில்லை என அறிவித்திருப்பதும் வரவேற்கத்தக்கது.
ஓஎன்ஜிசி நிறுவனம் பழைய உரிமங்களைப் பயன்படுத்தி, புதிய கிணறுகள் அமைக்கும் அத்துமீறல்களை அனுமதிக்கக் கூடாது. காவிரி டெல்டா பகுதியில் சாலைகள் அமைப்பது, குடிநீர் வழங்கல், தெரு விளக்கு அமைத்தல், கல்வி மற்றும் மருத்துவக் கட்டமைப்புகளை உருவாக்குதல் போன்ற பணிகளுக்கு ஓஎன்ஜிசி நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும்.
எண்ணெய் குழாய் பாதை அமைந்துள்ள விவசாய நிலங்களுக்கு மாதவாடகை வழங்க வேண்டும். எண்ணெய் குழாய் உடைப்பு ஏற்படும் நேரங்களில் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு தருவதுடன், நிலங்களில் படிந்துள்ள எண்ணெய் கலந்த மண்ணை அப்புறப்படுத்தி, சாகுபடிக்கு உகந்த மண் போட்டுத் தர வேண்டும்.
இதுபோன்ற கடமைப் பொறுப்புகளை ஓஎன்ஜிசி நிறுவனம் சட்டப்பூர்வமாக ஏற்கும் வகையில் பொருத்தமான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது".
இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT