Last Updated : 02 Jul, 2021 09:45 AM

2  

Published : 02 Jul 2021 09:45 AM
Last Updated : 02 Jul 2021 09:45 AM

தனியாருக்கு பரிவு: மோடியாகி விடுவாரா வானதி?- சலசலக்கும் கோவை பாஜக அரசியல்

எம்.எல்.ஏவாக அதிமுகவினருடன் -வானதி

‘இந்த லேடியா, மோடியா?’ மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உச்சரித்ததில் பாப்புலரான வசனங்களில் ஒன்று இது. இதே வசனத்தை கொஞ்சம் மாற்றிப் போட்டு, ‘தனியாருக்கு பரிவு காட்டுவதால் இந்த லேடி மோடியாகி விட முடியுமா?’ என்று சலசலத்துக் கொண்டிருக்கின்றனர் கோவை பாஜகவினர். அவர்கள் குறிப்பிடும் லேடி பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான வானதி சீனிவாசன்.

கோவை மாவட்டத்தில் வென்ற அதிமுக-பாஜக கூட்டணி 10 எம்.எல்.ஏக்களில் அதிகமாய் செய்திகளாகி, அரசியல் சர்ச்சைக்குள்ளாவது வானதிதான். ஒரு முறை தொகுதிக்குள் உள்ள சில ரேசன் கடைகளுக்கு சென்றார். அங்கே உலுத்துப் போன அரிசியை கண்டுபிடித்து அதிகாரிகளை பிடிபிடியென்று பிடித்தார். ‘இது மாநில அரசு தந்த அரிசியல்ல; மத்தியஅரசு மத்திய தொகுப்பிலிருந்து அனுப்பும் அரிசி!’ என்று சொன்னதும், உஷாராகி நழுவினார்...!’ இப்படியொரு செய்தி. கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு பூஜை போட்ட பணிகளை தொடங்கினார். அதற்கு தன் வெற்றிக்காக பாடுபட்ட பாஜகவினரை அழைக்கவில்லை; மாறாக அதிமுகவில் உள்ள மாவட்ட, வட்ட, நகர, பகுதி கழக நிர்வாகிகளை எல்லாம் அழைத்திருந்தார். இதைப்பற்றி உள்ளூர் பாஜகவினர் குமுறுகுமுறென்று குமுறுகிறார்கள்!’ என்று இன்னொரு செய்தி. இது நம் ஹாட்லிக்ஸிலும் வெளியான செய்தி, அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த லேடி, மோடி எதுகை மோனை குரல்கள் பாஜகவிற்குள்ளேயே ஒலிக்கிறது. இதன் பின்னணி நம்மிடம் இப்படி பகிர்ந்து கொண்டார்கள் உள்ளூர் பாஜக நிர்வாகிகள்.:

அதிமுக, திமுகவில் வில் ஒவ்வொரு கட்சி மாவட்டங்களுக்குள்ளும் பகுதிக்கழகம், கிளைக்கழகம் என்று உள்ளது போல் பாஜகவில் மாவட்டங்களுக்குள் தொகுதி, வார்டு, கிளைகள் என்று கட்சிப் பொறுப்புகள் உள்ளன. கோவை தெற்கு தொகுதியில் மொத்தம் நான்கு மண்டலங்கள் வருகிறது. இதன் நிர்வாகிகள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்புக்கு ஒரு மண்டல் கட்சி அலுவலகம் திறக்கச்சொல்லி கட்சி பிரமுகர் ஒருவர் மூலம் 10 நாட்களுக்கு முன் வலியுறுத்தல் வந்திருக்கிறது. அப்படி செய்தால் அலுவலக வாடகை, அன்றாட பணிகளுக்கான செலவினங்கள் யார் தருவது? என்ற கேள்வியுடன் மண்டல பொறுப்பாளர்கள் வாளாவிருந்துள்ளனர். இதையடுத்து சில நாட்களுக்கு முன் தொகுதிக்குள் உள்ள மண்டல நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி பல்வேறு விஷயங்களை நேரடியாகவே பேசியுள்ளார் வானதி. அதில் இந்த அலுவலக விவகாரமும் வந்திருக்கிறது. அதற்கு மண்டல் பொறுப்பாளர்கள் மாதம் வாடகையாக ரூ.15,000, இதர செலவுகள் ரூ 15,000 ஆக மொத்தம் ரூ.30 ஆயிரம் தேவை. அதில் வாடகை மட்டுமாவது வானதியம்மா பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினராம். அதற்கு வானதி தரப்பில். ‘அடுத்து உள்ளாட்சி தேர்தல் வரப்போகிறது. அதற்கு நீங்கள் இப்படி மண்டல் அலுவலகம் திறந்து பணிகளை துரிதப்படுத்தினால்தான் உங்களுக்கான ஸ்கோரை அடிக்க முடியும். நானே கமல்ஹாசன் போன்ற நட்சத்திரத்தை கடுமையாக நான் பாடுபட்டுத்தான் வென்றேன்!’ என்றெல்லாம் பேசி மாத வாடகை பகிர்ந்து கொள்ள சம்மதிக்கவில்லை என்கிறார்கள்.

அதே நேரம், ‘நம் தொகுதியில் பூங்காக்கள் எல்லாம் பாழடைந்து கிடக்கிறது. அவை எந்த நிலையில் உள்ளது என்று பார்த்து எனக்கு தகவல் தர வேண்டும்!’ என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கும் மண்டல் பொறுப்பாளர்கள் அதிருப்தியே தெரிவித்திருக்கின்றனர். வானதி சொன்ன வேலையை செய்யவில்லை. ஆனால் வானதியே தன் ஆதரவாளர்கள் சில பேரை மட்டும் அழைத்துக் கொண்டு சில வார்டுகளில் உள்ள பூங்காக்களுக்கு கடந்த வாரம் விசிட் செய்திருக்கிறார். அங்கே உள்ள ஒழுங்கீனங்களை திரட்டியிருக்கிறார். அதையடுத்து கடந்த திங்களன்று கோவை மாநகராட்சி ஆணையரை சந்தித்து கோவை தெற்குத் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி பூங்காக்களை பராமரிக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். சி.எஸ்.ஆர் நிதியில் அதைப் பராமரிக்க வேண்டும்!’ என்று கோரிக்கை விடுத்துள்ளார். இது மீடியாக்களில் செய்திகளானது. அதைப் பார்த்துத்தான் பாஜகவில் குறிப்பிட்ட மண்டல் பொறுப்பாளர்கள் சலசலத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தேர்தல் வாக்கு சேகரிப்பில் பாஜகவினருடன்-வானதி

இது குறித்து நம்மிடம் பேசிய பொறுப்பாளர் ஒருவர்,

‘‘மோடி எப்படி பிரதமர் ஆனவுடன் எல்லாவற்றையும் தனியாருக்கு கொடுப்பதில் ஆர்வம் காட்டினாரோ, அதைத்தான் எங்க வானதி அம்மா எம்.எல்.ஏ., ஆனவுடன் செய்யறாங்க. கரோனா காலத்தில் எல்லாமே முடங்கிக்கிடக்கிறது. அதிலும் பூங்காக்கள் மாதக்கணக்கில் வருடக்கணக்கில் பூட்டியே கிடக்கிறது. அதை தற்போது திறக்க வேண்டிய அவசியம் என்ன? அதிலும் அதை தனியாரை விட்டு பராமரித்து, அவர்கள் சிஎஸ்ஆர் நிதியில் அதை செய்ய வலியுறுத்த வேண்டிய அவசியம் என்ன? இப்படி செய்வதால் இந்த லேடி எம்.எல்.ஏ., மோடி பிரதமர் போல ஆகி விடுவாரா? கோவைதான் தொற்றில் முதலிடத்தில் இன்னமும் உள்ளது.

கொத்துக் கொத்தாக மக்கள் பாதிக்கப்பட்டு செத்துக் கொண்டிருக்கிறார்கள். ‘முதல் அலை இவ்வளவு மோசமாக இல்லை. அப்போதே தொகுதியில் இருந்த எம்.எல்.ஏக்கள் வீட்டு வீட்டுக்கு அரிசி பருப்பு என 22 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கினார்கள். வீடுவீடாகப் போய் கபசுரக்குடிநீர், மருந்துகள், காய்கறிகள் வழங்கினார்கள். இப்போது நிலைமை மோசமாக இருந்தும் எம்.எல்.ஏக்களிடமிருந்து எதுவுமே இல்லை. தொகுதி மக்கள் நம் எம்.எல்.ஏ ஏதாவது கொடுக்க மாட்டாரா என ஏங்குகிறார்கள் அதற்கு ஏதாவது செய்யுங்கள். நீங்கள் எம்.எல்.ஏவாக இல்லாத நிலையிலேயே இந்த தொகுதியில் போட்டியிடுவதற்காகவே மக்கள் சேவை மையம் என்ற ஒன்றை உருவாக்கி போன 4 ஆண்டுகளாகவே வேலைவாய்ப்பு முகாம், மகளிர்களுக்கு உதவிகள் எல்லாம் செய்தீர்கள். இப்போதோ எம்.எல்.ஏ ஆனபிறகு மக்கள் சேவை மையம் என்பதே ஸ்லீப்பர் செல் போல் ஆகிக் கொண்டிருக்கிறது!’ என்றெல்லாம் எவ்வளவோ சொன்னோம். அதைப் பற்றி அவர் கவலையேபடவில்லை. அவர் செய்கை நீ என்னவோ செய். என் வெற்றிக்கு காரணம் நான்தான். நாளைக்கே உள்ளாட்சி தேர்தல் வந்தால் உன்னை வெற்றி பெற வைத்தேன் அல்லவா? அது போல என்னை வெற்றி பெற வை என்று என்னிடம் வந்து நிற்காதே!’ என சொல்லாமல் சொல்கிறார்’’ என்று விஷயங்களை அடுக்கினார்.

இதுகுறித்து வானதி என்ன சொல்கிறார். தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம். நாம் சொன்னதையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டவர்,

‘‘கரோனா காலத்தில் தனிப்பட்ட முறையில் தொகுதி மக்களுக்கு எம்.எல்.ஏ என்ற முறையில் நிவாரணம் நான் கொடுக்கவில்லையே தவிர அதற்கு அடிப்படை கட்டமைப்பு உதவிகள் செய்திருக்கிறேனே. ஆஸ்பத்திரிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்குவது, என்னை நாடி வரும் நோயாளிகளுக்கு படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்வது எல்லாம் செய்திருக்கிறேன். அதைத்தாண்டித்தான் பூங்காக்களுக்கான கோரிக்கை. அது சுத்தமாக கண்டுகொள்ளப்படாது இருக்கிறது. அவற்றை பராமரிக்க ரோட்டரி கிளப் உட்பட பலரும் விரும்புகிறார்கள். ஒரு வார்டுக்குள் போகும்போது இரண்டு கட்சிக்காரர்களுக்கும்தான் (அதிமுக-திமுக) தகவல் கொடுக்கிறேன். நேற்று கூட நான் போன பகுதிகளில் எங்க கட்சிக்காரங்கதானே இருந்தாங்க. தவிர எங்க கட்சிக்குள்ளேயே உங்களுக்கு தெரியாததல்ல. ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் இருக்கும்!’’ என்று சிரித்தவர் பல உட்கட்சி விவகாரங்கள் உள்ளடங்கிய கேள்விகளுக்கும் சிரிப்பையே விடையாக கொடுத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x