Published : 02 Jul 2021 03:13 AM
Last Updated : 02 Jul 2021 03:13 AM

பட்டுக்கோட்டை அருகே அரசுப் பள்ளியில் புதிதாக சேரும் மாணவர்கள் பெயரில் ரூ.1,000 வைப்புத்தொகை: குலுக்கலில் பெற்றோருக்கு ஊக்கத்தொகை வழங்க முடிவு

புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு வைப்புத் தொகை ரூ.1,000 செலுத்தி வழங்கப்பட்ட பாஸ் புத்தகம்.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் புதிதாக சேரும் மாணவரின் பெயரில் ரூ.1,000 வைப்புத் தொகையும், குலுக்கலில் பெற்றோருக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஆலடிக்குமுளையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 55 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், முன்னாள் மாணவர்கள் 10 பேர், தலைமையாசிரியர் சரவணனுடன் இணைந்துபுதிதாக சேரும் மாணவர்களுக்கு பரிசுகள், சலுகைகளை வழங்கி அரசுப் பள்ளியில் தங்களின் பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும் என முடிவு செய்தனர்.

அதற்காக புதிதாக இந்த கல்வி ஆண்டில் சேரும் மாணவர்களின் பெயரில் அஞ்சலகத்தில் ரூ.1,000 டெபாசிட் செய்யப்படுகிறது. மாணவர்களை சேர்க்கும் பெற்றோர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு குலுக்கல் முறையில் ரூ.10,000 ஊக்கத் தொகையும் வழங்குவதாக அறிவித்தனர்.

இதையடுத்து, மாணவர் சேர்க்கை தொடங்கிய சில நாட்களில் புதிதாக 14 மாணவர்கள் பள்ளியில் சேர்ந்துள்ளனர். அவர்களின் பெயர்களில், அஞ்சலகத்தில் தொடங்கிய வைப்பு கணக்குப் புத்தகத்தை நேற்று பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் ஜான்பாக்கியம் செல்வம், தலைமையாசிரியர் சரவணன் மற்றும் கிராம மக்கள் வழங்கி ஊக்கப்படுத்தினர்.

இதுகுறித்து தலைமையாசிரியர் சரவணன் கூறியதாவது: பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், புதிதாக சேர்பவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதற்காக பள்ளியின் முன்னாள் மாணவர் வை.கோவிந்தராசு ரூ.25 ஆயிரம் நிதியுதவி அளித்தார். நானும் எனது பங்குக்கு ரூ.10 ஆயிரம் வழங்கியுள்ளேன். பள்ளியில் புதிதாக சேரும் அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் பெயரில் தலா ரூ.1,000 வீதம் செலுத்தி அஞ்சலகத்தில் வைப்பு கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

புதிதாக சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்களை குலுக்கல் முறையில் 3 பேரை தேர்வு செய்து ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம், ரூ.2,500 ஊக்கத் தொகையாக வழங்கப்பட உள்ளது. தொலைதூரத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு வாகன வசதி, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில், முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு பரிசு, 450-க்கு மேல் மதிப்பெண் பெறும் அனைத்து மாணவர்களுக்கும் 11-ம் வகுப்பில் சேருவதற்கான கல்வி செலவும் வழங்கப்பட உள்ளது என்றார்.

இதேபோல, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே ஈசநத்தத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், புதிதாக சேரும் மாணவ, மாணவிகளுக்கு இப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆ.ஜேசுதாஸ், தனது சொந்த பணத்தில் இருந்து தலா ரூ.1,000 வீதம் வழங்கி வருகிறார்.

அப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று மாணவர் சேர்க்கையை நடத்தி வரும் அவர், நிகழாண்டில் புதிதாக சேர்ந்துள்ள 31 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.1,000 வீதம் ரூ.31 ஆயிரம் வழங்கியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x