Published : 01 Jul 2021 08:17 PM
Last Updated : 01 Jul 2021 08:17 PM

தமிழகம் வணிக வரியை நம்பித்தான் உள்ளது: அமைச்சர் துரைமுருகன்

வேலூர்

தமிழகம் வணிக வரியை நம்பித்தான் உள்ளது என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான வணிகர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் இன்று (ஜூலை 1) நடைபெற்றது.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வரவேற்றார்.

கூட்டத்தில், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அரசுச் செயலாளர் ஜோதி நிர்மலா, வணிக வரித்துறை ஆணையர் சித்திக் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கதிர்ஆனந்த் (வேலூர்), சி.என்.அண்ணாதுரை (திருவண்ணாமலை), சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார் (அணைக்கட்டு), தேவராஜ் (ஜோலார்பேட்டை), கார்த்திகேயன் (வேலூர்), ஜெ.எல்.ஈஸ்வரப்பன் (ஆற்காடு), வில்வநாதன் (ஆம்பூர்), நல்லதம்பி (திருப்பத்தூர்), மு.பெ.கிரி (செங்கம்), அம்பேத்குமார் (வந்தவாசி) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வணிகர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். வணிகர்கள் சார்பில் அரசுக்குப் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

கூட்டத்தில், வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி பேசும்போது, ‘‘கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.5 லட்சம் கோடி கடன் வைத்துச் சென்றுள்ளனர். எனவே, அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளைத் தவறாமல் செலுத்த வேண்டும். நியாயமான தொழில் செய்யும் வணிகர்களுக்குத் தமிழக அரசு என்றும் துணையாக இருக்கும்.

போலியான ஜிஎஸ்டி ரசீது தயாரிக்கும் நபர்களை வணிகர்கள் அடையாளம் கண்டு அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும். தமிழக அரசின் சிறு, குறு வணிகர்கள், வணிகர் நல வாரியத்தில் ரூ.500 கட்டணம் இல்லாமல் சேர்க்கப்படுவர்’’ என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, ‘‘தமிழக அரசாங்கத்திற்கு மதுவிலக்குத் துறை மற்றும் வணிகவரித் துறை ஆகிய இரண்டு துறைகள்தான் வருவாயை ஈட்டித் தருகின்றன. குறிப்பாக, வணிக வரித்துறை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது. பெட்ரோல், டீசல் போன்றவற்றால் சுமார் 40 ஆயிரம் கோடி கிடைத்தாலும் அதில் 50 விழுக்காடு கூடக் கிடைப்பதில்லை.

ஆகையால் தமிழகம் வணிக வரியை நம்பித்தான் உள்ளது. இதை நம்பித்தான் பல திட்டங்களைச் செய்ய வேண்டும். அரசாங்கத்திற்கு ஊற்றுக் கண்ணாக விளங்கும் வணிகர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய தமிழக அரசு என்றும் உறுதுணையாக இருக்கும். வணிகவரித் துறை அதிகாரிகள் தங்கள் தர்பாரைக் குறைக்க வேண்டும். வணிகர்களை மெதுவாக அணுக வேண்டும்.

ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூர் வணிக வரிக்கோட்டம் மிகப் பெரியதாக இருக்கிறது. இதனை இரண்டாகப் பிரிக்க வேண்டும். வணிகர்களுக்காகப் புதிய வணிக வளாகம் கட்ட வேண்டும் என்று கோரி வருகின்றனர். இதை அமைச்சர் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்’’ என்றார்.

பின்னர், செய்தியாளர்களிடம் துரைமுருகன் கூறும்போது, ‘‘மேகேதாட்டு அணைப் பிரச்சினை தொடர்பாக வரும் 5-ம் தேதி டெல்லி சென்று மத்திய ஜல் சக்தி துறை அமைச்சரை சந்தித்துப் பேச உள்ளேன். தமிழகத்திற்கு ஜல்சக்தி துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்து 700 கோடி ரூபாய் நிதி போதுமானதாக இல்லை. இதுகுறித்தும் மத்திய அமைச்சரிடம் பேசி உரிய நிதியை பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

மழைக் காலங்களில் வீணாகும் தண்ணீரைப் பாலாற்றில் திருப்பி விடுவதற்காக தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் திட்டத்தின் நோக்கமே வறண்ட பகுதியைச் செழிப்பான பகுதியாக மாற்றுவதாகும். பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் பணிகளுக்கான ஆய்வுப் பணிகள் முடிந்துள்ளன. ஆற்றின் குறுக்கே 6அல்லது 7 தடுப்பணைகள் கட்டப்படும். குறிப்பாக இந்த ஆண்டு இரண்டு அல்லது மூன்று தடுப்பணைகள் கட்டப்படும்’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x