Published : 01 Jul 2021 05:30 PM
Last Updated : 01 Jul 2021 05:30 PM

நீர்வழித்தடங்களில் கொசுக்களை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் சோதனை முறையில் மருந்து தெளிக்கும் பணி; சென்னை மாநகராட்சி அறிவிப்பு

ட்ரோன் மூலம் சோதனை முறையில் மருந்து தெளிக்கும் பணி.

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட நீர்வழித்தடங்களில் கொசுக்களை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் சோதனை முறையில் மருந்து தெளிக்கும் பணி 15 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (ஜூலை 01) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கொசு ஒழிப்பு பணியாளர்களைக் கொண்டு மருந்து தெளிப்பான்கள், பவர் ஸ்ப்ரேயர்கள், பேட்டரி மூலம் இயங்கும் ஸ்ப்ரேயர்கள், கையினால் இயங்கும் புகைப்பரப்பும் இயந்திரங்கள் மற்றும் வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் இயந்திரங்களின் மூலம் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, நீர்வழித்தடங்களில் பணியாளர்களின் பாதுகாப்பு நலன் கருதி, மனித ஆற்றல் பயன்படுத்தப்படுவதை தவிர்க்கவும் மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மருந்து தெளிக்கும் பணிகளை மேற்கொள்ள நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி அறிவுறுத்தினார்.

அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சி அண்ணா பல்கலைக்கழகத்தின் AVIONICS துறையுடன் இணைந்து, நீர்வழித்தடங்களில் உள்ள கொசுக்கள் மற்றும் கொசுப்புழுக்கள் ஆகியவற்றை அழிக்க சோதனை முறையில் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணியினை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி 26.06.2021 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, மாநகராட்சியின் சார்பில் இன்று முதல் (ஜூலை 01) தொடர்ந்து 15 நாட்களுக்கு ட்ரோன் இயந்திரங்களைக் கொண்டு கொசுப்புழுக்களை கட்டுப்படுத்தும் வகையில் பக்கிங்ஹாம், கொடுங்கையூர், வியாசர்பாடி, கேப்டன் காட்டன், கூவம், ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம், அடையாறு, வீராங்கல் ஓடை மற்றும் மாம்பலம் ஆகிய கால்வாய்களில், சுமார் 140 கி.மீ. நீளத்திற்கு மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாள் ஒன்றுக்கு மூன்று மண்டலங்களில் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்படும். ஒவ்வொரு இடத்திலும் மருந்து தெளிக்கப்படும் நாளுக்கு முன்னதாக, கொசுப்புழு அடர்த்தி அளவு கணக்கிடப்பட்டு, மருந்து தெளித்த 24 மணிநேரத்திற்கு பிறகு அதே இடத்தில் கொசுப்புழு அடர்த்தி மீண்டும் கணக்கீடு செய்யப்படும். இதன்மூலம், கொசுப்புழுக்களின் பெருக்கம் கட்டுப்படுத்தப்படுவது உறுதிசெய்யப்படும்.

மேலும், நாள்தோறும் எந்தெந்த மண்டலங்களில் ட்ரோன் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை https://www.gccdrones.in/ என்ற இணையதள இணைப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்".

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x