Published : 01 Jul 2021 05:16 PM
Last Updated : 01 Jul 2021 05:16 PM
சிவசங்கர் பாபா பள்ளியில் பாலியல் தொல்லைக்கு ஆளானவர்கள் விசாரணை நீதிமன்றத்தில் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் உள்ள சுசீல்ஹரி சர்வதேச உண்டு உறைவிடப் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு, பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா சிபிசிஐடி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சிவசங்கர் பாபாவிற்காக மாணவிகளை மூளை சலவை செய்ததாக அவரது பக்தை சுஷ்மிதாவும் கைது செய்யப்பட்டுள்ளர்.
இந்நிலையில் இந்த வழக்கில் தேடப்பட்டு வரும், பள்ளியின் ஆங்கில ஆசிரியை தீபா வெங்கடராமன், பள்ளி நிர்வாகி ஜானகி சினிவாசன், அவரது மருமகளும் பாபாவின் பக்தையுமானா பாரதி, திவ்யா பாலசுப்பிரமணியம், கனகாம்பிகை ஆகியோர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அதில், 2010-12ஆம் ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவிகள் அளித்த புகாரில் சிபிசிஐடி காவல்துறையினர், போக்சா சட்டம் மற்றும் பெண்கள் துன்புறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், சிவசங்கர் பாபா மீதான வழக்கில் தேவையில்லாமல் தங்களையும் சேர்த்துள்ளதாக சிபிசிஐடி போலீஸார் மீது புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த மனுக்கள் நீதிபதி எம்.தண்டபாணி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாலியல் தொல்லை குற்றச்சாட்டுக்கு ஆளான சிவசங்கர் பாபா மற்றும் அவருக்கு உதவியதாக புகாருக்கு உள்ளனவர்களுக்கு எதிராக பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவிகள் விசாரணை நீதிமன்றத்தில் அளித்த ஒப்புதல் வாக்குமூலங்களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
மேலும், இந்த விவகாரத்தில் பதிவான 3 வழக்குகளின் விசாரணை தொடர்பாக தகவலை அறிக்கையாக தாக்கல் செய்யுள்ளதாகவும், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து மூன்று வழக்குகளின் முதல் தகவலறிக்கைகள் உள்ளிட்ட வழக்கு தொடர்பான ஆவணங்களை மனுதாரர்கள் தரப்புக்கு வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (ஜூலை 5) நீதிபதி ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT