Last Updated : 01 Jul, 2021 05:21 PM

 

Published : 01 Jul 2021 05:21 PM
Last Updated : 01 Jul 2021 05:21 PM

நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் புத்தன்அணை திட்ட பணிகள் 83 சதவீதம் நிறைவு; தினமும் 3.20 லட்சம் மக்கள் பயன்பெறுவர்

குடிநீர் திட்ட பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்.

நாகர்கோவில்

நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் புத்தன் அணை திட்டம் மூலம் தினமும் 3 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் பயன்பெறுவர். புத்தன் அணை திட்டத்தின் 83 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகிறது.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் வாயிலாக ரூ.566.16 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு குடிநீர் திட்ட பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தலைமையில் ஆய்வு கூட்டம் இன்று (ஜூலை 01) நடைபெற்றது.

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷாஅஜித் முன்னிலை வகித்தார். தமிழக தகவல் தொழில் நுட்பவியல்துறை அமைச்சர் மனோதங்கராஜ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் வாயிலாக, நாகர்கோவில் மாநகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.251.43 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப் பணிகள் வாயிலாக, நாகர்கோவில் மாநகராட்சி பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய நீராதாரமான புத்தன்அணையின் மேல்பகுதியில் உள்ள பரளியாற்றில் நீர் எடுக்கும் கிணறு மற்றும் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், கிருஷ்ணன் கோயிலில் புதிதாக கட்டப்பட்டு வரும் 41.12 எம்எல்டி சுத்திகரிப்பு நிலையத்தில் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு, 11 புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் மற்றும் 12 பழைய மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் குடிநீர் ஏற்றப்பட உள்ளது.

அதன்பின்னர், புதிதாக பதிக்கப்பட்டுள்ள 420.612 கிலோ மீட்டர் பகிர்மான குழாய்கள் வழியாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்படவுள்ளது. புத்தன்அணை குடிநீர் திட்டத்தின் கீழ் நாகர்கோவில் நகர பகுதிகளில் 85,000 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படவுள்ளது.

தற்போது 83 சதவீத பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், இத்திட்டத்தால் 3 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் தினமும் பயனடைவர். தினமும் ஒருவருக்கு 135 லிட்டர் அளவுக்கு குடிநீர் வழங்கப்படும். புத்தன்அணை திட்டத்தில் மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக, அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்தார்.

மேலும், அழகியபாண்டியபுரம் பேரூராட்சி மற்றும் 8 இதர பேரூராட்சிகள், தோவாளை, அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம், ஆகிய ஒன்றியங்களிலுள்ள 246 ஊரக குடியிருப்புகளுக்காக ரூ.109.79 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள அழகியபாண்டியபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. வருகிற 16-ம் தேதி முதல் முறையாக குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதைப்போல், இரணியல் பேரூராட்சி மற்றும் 374 வழியோர குடியிருப்புகளுக்காக ரூ.174 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கூட்டுகுடிநீர் திட்டம் இதுவரை 85 சதவீத விழுக்காடு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குழித்துறை நகராட்சிக்குட்பட்ட பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கிட குழித்துறை ஆற்றுநீரை நீராதாரமாக கொண்ட புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.30.94 கோடி மதிப்பில் நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இத்திட்டத்தினால் குழித்துறை நகராட்சியில் 24,000 பொதுமக்களுக்கு நாளொன்றுக்கு ஒருவருக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்கப்பட உள்ளது. குமரி மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மொத்தம் 12 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கெனவே 13 லட்சத்து 76 ஆயிரம் மக்கள் பயன்பெற்று வரும் நிலையில், மீதமுள்ள திட்டங்கள் நடைமுறைக்கு வரும்போது மேலும் அதிகமான மக்கள் பயனடைவார்கள் என, அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்தார். ஆய்வு கூட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் கதிரேசன் மற்றும் உதவி நிர்வாக பொறியாளர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

பாதாள சாக்கடை திட்டம் 96 சதவீதம் நிறைவு

நாகர்கோவில் பாதாள சாக்கடை திட்டம் ரூ.76.04 கோடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. பாதாள சாக்கடை திட்ட பணிகள் இதுவரை 96 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகளை துரிதமாக முடித்து திட்டத்தினை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என, அதிகாரிகளிடம் அமைச்சர் மனோதங்கராஜ் அறிவுறுத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x