Published : 01 Jul 2021 05:00 PM
Last Updated : 01 Jul 2021 05:00 PM
அரசு மருத்துவமனைகள்தான் சாமானிய மக்களின் கடைசி நம்பிக்கை. அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை அறிவுறுத்தினார்.
தேசிய மருத்துவர்கள் தினம் கதிர்காமம் இந்திராகாந்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கொண்டாடப்பட்டது. சுகாதாரத்துறையின் மூலம் நடைபெற்ற விழாவில் துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை பங்கேற்று கரோனா பெருந்தொற்றுச் சூழலில் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்தார்.
விழாவில் பேசிய துணைநிலை ஆளுநர் பேசுகையில், "தேசிய மருத்துவர்கள் தினத்தை புதுச்சேரியில் கொண்டாட வேண்டும் என்று விரும்பினேன். ஏனென்றால், நான் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்ற பிறகு கோவிட் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் மருத்துவர்கள் கொடுத்த ஒத்துழைப்பு பேருதவியாக இருந்தது. அடிப்படையில் ஒரு மருத்துவராக இருப்பதால், மருத்துவர்களின் சிரமங்களை நான் புரிந்து வைத்திருக்கிறேன். மருத்துவராக இருப்பது உண்மையில் ஒரு சவாலான காரியம். மருத்துவர்கள் மற்றவர்கள் உயிரைக் காப்பாற்றும் கடவுளின் தூதர்கள்.
சில நேரங்களில், நோயாளிகளின் உறவினர்கள் தங்களுக்கு அன்பானவர்களை இழக்க நேரிடும்போது அந்த கோபத்தை மருத்துவர்கள் மீது காட்டுகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில் மருத்துவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது ஒரு நிர்வாகியாக - ஆளுநராக எனக்கிருக்கும் அக்கறையாக உள்ளது.
கோவிட் பெருந்தொற்றுச் சூழலில் நாம் சுமார் 1500 மருத்துவர்களை இழந்துவிட்டோம். மருத்துவர்கள் தங்கள் நலனையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தங்கள் மீதும் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். மக்களுக்கு என்னுடைய வேண்டுகோள் நம் அனைவரின் உயிரைக் காப்பாற்றும் மருத்துவர்களை நாம் பாதுகாக்க வேண்டும் என்பதுதான்.
கரோனாவைக் கட்டுப்படுத்தியதற்குப் பின்னால் அவர்களுடைய தியாகம் இருக்கிறது. மருத்துவர்களின் குடும்பங்களிலும் சிலர் பாதிக்கப்பட்டிக்கலாம். நோயாளிகளையும் குடும்பத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கிறார்கள். சிலநேரங்களில் மருத்துவர்களின் தியாகங்கள் மறைக்கப்படுகிறது.
அரசு மருத்துவமனைகள்தான் சாமானிய மக்களின் கடைசி நம்பிக்கை. அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும்.
புதுச்சேரி அரசு மருத்துவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கிறது. மருத்துவர்கள் இணைந்து செயல்பட்டு நோயாளிகளைப் பாதுகாக்க வேண்டும். கோவிட் சூழலில், மருத்துவர்கள் எவ்வளவு மன அழுத்தத்தில், எவ்வளவு நிர்பந்தத்தில் இருந்தார்கள் என்பது தெரியும்." என்று குறிப்பிட்டார்.
முன்னதாக, தேசிய மருத்துவர்கள் தின விழா நினைவாக மருத்துவமனை வளாகத்தில் துணைநிலை ஆளுநர் மரக்கன்றுகள் நட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT