Published : 01 Jul 2021 04:42 PM
Last Updated : 01 Jul 2021 04:42 PM

விதிமீறும் வாகன நம்பர் பிளேட்டை படம் பிடித்து அபராதம் விதிக்கும் நவீன கட்டுப்பாட்டறை: காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்

சென்னை

சென்னை அண்ணாநகர் பகுதியில் 5 சிக்னல்களில் போக்குவரத்து விதிமீறும் வாகனங்களின் நம்பர் பிளேட்டை படம் பிடித்து வாகன ஓட்டிகளின் செல்போன் எண்ணுக்கு உடனுக்குடன் போக்குவரத்து சலான்கள் அனுப்பும் போக்குவரத்து தானியங்கி கட்டுப்பாட்டறையை காவல் ஆணையர் இன்று தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து சென்னை காவல் ஆணையரக செய்திக்குறிப்பு வருமாறு:

“சென்னை, அண்ணாநகர் போக்குவரத்து காவல் சரகத்திற்குட்பட்ட அண்ணாநகர் மற்றும் திருமங்கலம் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குப்ட்ட முக்கியமான சாலை சந்திப்புகளான 1.அண்ணாநகர் ரவுண்டனா, 2. அண்ணாநகர் காவல் நிலைய ரவுண்டனா, 3.சாந்தி காலனி சந்திப்பு, 4.100 அடி சாலை மற்றும் எஸ்டேட் சாலை சந்திப்பு, 5.மேற்கு டிப்போ மற்றும் 18வது சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் 2019 ஆம் ஆண்டு, ஹுண்டாய் மோட்டார்ஸ் இந்திய லிமிடெட் நிறுவனத்துடன் ஓருங்கிணைந்து 61 நவீன கேமிராக்கள் நிறுவப்பட்டது.

மேற்கண்ட 5 சிக்னல்களிலும் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களின் பதிவு எண்களை துல்லியமாக படம் பிடித்து, கட்டுப்பாட்டறையில் கண்காணித்து, விதிமீறிய வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிமீறல் குறித்த அபராத சலான்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

இதில் கூடுதல் வசதியாக, சென்னை பெருநகர போக்குவரத்து காவல் மற்றும் National Informatics Centre (NIC) உடன் ஒருங்கிணைந்து, இத்திட்டம் மேலும் நவீனப்படுத்தப்பட்டு, போக்குவரத்து விதிமீறும் வாகனங்களின் பதிவு எண்கள் கேமிராக்களில் பதிவு செய்யப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளின் செல்போன் எண்களுக்கு கட்டுப்பாட்டறையில் உள்ள கணினி மூலம் உடனுக்குடன் அபராத சலான்கள் அனுப்பும் முறைக்கான பணி செயல்படுத்தப்பட்டு, முடிவுற்றது.

இன்று மதியம், அண்ணாநகர் ரவுண்டனா அருகிலுள்ள போக்குவரத்து விதிமீறல் கண்காணிக்கும் அண்ணாநகர் போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டறையை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் திறந்து வைத்து, விதிமீறலில் ஈடுபடும் வாகன உரிமையாளர்களின் செல்போன் எண்ணுக்கு தானியங்கி சலான் அனுப்பும் புதிய நடைமுறையை தொடங்கி வைத்தார்.

அதன்படி இன்று முதல் மேற்கண்ட 5 சிக்னல்களிலும், போக்குவரத்து விதிமீறல், (Signal violation),எல்லைக்கோட்டை தாண்டுதல் (Stop line cross), தவறான வழியில் வழியில் செல்லுதல் (Wrong way), அதிக வேகம் (Over speed) உட்பட போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள் கண்டறியப்பட்டு, தானியங்கி கட்டுப்பாட்டறையில் உள்ள கணினி மூலம் மேற்படி வாகனங்களின் உரிமையாளர்களின் செல்போன் எண்களுக்கு தகவல் அளித்து, சலான் அனுப்பும் முறை நடைமுறைபடுத்தப்பட்டது.

பிற மாநிலங்களிலிருந்து சென்னைக்கு வரும் நுழைவு வாயில்களில் ஒன்றான மாதவரம் GNT சாலை மற்றும் 100 அடி சாலை சந்திப்பான மாதவரம் ரவுண்டனா, சென்னையிலுள்ள பல பகுதிகளை இணைக்கும் சாலை சந்திப்பு என்பதால், அதிகளவில் வாகனங்கள் செல்லும் இடமாக உள்ளது.

மாதவரம் ரவுண்டனாவில் போக்குவரத்து காவல் சார்பில் நவீன வசதிகளுடன் போக்குவரத்து புறக்காவல் நிலையம் மற்றும் அப்பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கும் பணி நடைபெற்று முடிவுற்றது.

இன்று மதியம், மாதவரம் ரவுண்டனா அருகில் புதிதாக அமைக்கப்பட்ட மாதவரம் போக்குவரத்து புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தார். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்ட 4 ANPR அதிநவீன கேமராக்கள் மற்றும் 60 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x