Published : 01 Jul 2021 03:53 PM
Last Updated : 01 Jul 2021 03:53 PM
மருத்துவர்கள் தினம்: ஜூலை 1
மருத்துவர்களை ‘தெய்வங்களாக’ பார்க்கும் நேரம் இது. கடந்த சில வாரங்களுக்கு முன்புவரை மருத்துவமனையில் ஒரு ஆக்சிஜன் படுக்கை கிடைக்காதா என ஏங்கி அலைந்த கரோனா நோயாளிகளை, தன்னலம் சிறிதும் பாராமல் போராடி குணப்படுத்தியதில் அரசு பெண் மருத்துவர்களின் பங்கு அளவிட முடியாதது.
ஏப்ரல் முதல் தொடங்கிய கரோனா இரண்டாம் அலையின் தீவிரம் பலரையும் நிலைகுலையச் செய்தது. இதில் மருத்துவர்களும் தப்பவில்லை. பலர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) தகவல்படி, இரண்டாம் அலையில் மட்டும் தமிழகத்தில் 44 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.
எங்கு சென்றும் நோய் குணமாகாத நோயாளிகள், பணம் செலவழிக்க முடியாதவர்கள், மற்ற இடங்களில் இடம் கிடைக்காதவர்களின் கடைசி நம்பிக்கை அரசு மருத்துவமனைகள் மட்டுமே. சென்னையைவிடக் கோவையில் தொற்று பாதிப்பு அதிகம் இருந்த நேரத்தில் இங்குள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய மருத்துவர்கள் எதிர்கொண்ட சவால்களை நம்முடன் பகிர்ந்துகொண்டனர்.
"கரோனா தொற்று உச்சத்தில் இருந்த நேரத்தில் ஆம்புலன்ஸ்கள் வரிசை கட்டி நிற்கும். அதில் இருக்கும் நோயாளிகளுக்கு இடம் கிடைக்க ஏற்பாடு செய்துவிட்டு இரவு தூங்குவதற்கு மட்டுமே வீட்டுக்குச் செல்வேன்" என்கிறார் கோவை அரசு மருத்துவமனையின் டீன் டாக்டர் நிர்மலா.
நள்ளிரவில் வரும் அழைப்புகள்
அவர் மேலும் கூறும்போது, “எப்படியாவது ஒரு பெட் ஒதுக்கிக் கொடுங்க மேடம்' என உதவி கேட்டு தினமும் ஏராளமான அழைப்புகளை நள்ளிரவு வரை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சில நேரங்களில் அதிகாலை 2 மணிக்கெல்லாம் நோயாளிகளிடம் இருந்து அழைப்புகள் வந்துள்ளன. அவ்வாறு அழைப்புகள் வந்தபிறகு தூக்கம் என்பதே இருக்காது. தூங்கினாலும், தூங்கி எழும் முன்பாகவே மருத்துவர்கள், பணியாளர்கள், உதவி கேட்பவர்கள் எனப் பல தரப்பில் இருந்து அழைப்புகள் வரத்தொடங்கிவிடும். தொற்று பாதிப்பு அதிகரிப்பால் வீட்டைப் பெரிதாக கவனிக்க முடியவில்லை. அவர்களின் ஒத்துழைப்பு இருந்ததால்தான் சவால்களைச் சமாளிக்க முடிந்தது” என்றார்.
சிறுநீரகத் தொற்று பாதிப்பு
காற்று, தண்ணீர் இவையேதும் உட்புக முடியாத முழுக் கவச உடை (பிபிஇ கிட்), என்-95 முகக்கவசம், கண் கண்ணாடி, ஃபேஸ் ஷீல்டு, கையுறைகள் இவற்றை அணிந்துதான் கரோனா வார்டில் மருத்துவர்கள் பணியாற்ற வேண்டும். குறைந்தபட்சம் 6 மணி நேரம் அந்த உடையை அணிய வேண்டும். இதனால் ஏற்படும் சிரமங்கள் குறித்து மதுக்கரை அரசு மருத்துவமனை மயக்கவியல் மருத்துவர் மதுமதி கூறும்போது, “கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டும் பணிக்குத் திரும்பினேன். பணிக்காலத்தில் குழந்தைகளைக் கவனிக்க முடியவில்லை. கணவரும், உறவினர்களும்தான் கவனித்துக்கொண்டனர். இது ஒருபுறம் மன உளைச்சலை ஏற்படுத்தியது.
இதுபோக, தினசரி சந்திக்கும் சவால் பிபிஇ கிட். அதை அணிந்துவிட்டால் சிறுநீர் கழிக்கக்கூடச் செல்ல முடியாது. தண்ணீரும் அருந்த முடியாது. ஒருமுறை கழற்றிவிட்டால், அதைத் திரும்ப உபயோகப்படுத்த முடியாது. எனவே, உணவு உண்பது, சிறுநீர் கழிப்பது, தண்ணீர் அருந்துவது என அனைத்தையும் உடை அணிவதற்கு முன்பாகவே முடித்துவிட வேண்டும். இடையே சிறுநீர் கழிக்க நேரிடலாம் என்பதால், மிகக்குறைவாக நீர் அருந்திப் பணியாற்றினோம். முழுக் கவச உடையைத் தொடர்ந்து அணிவதால் மூச்சுவிடுவதில் சிரமம், தலைவலி, கண் மங்கலாகத் தெரிவது, நாக்கு வறண்டு போதல், வியர்வை கொட்டுவது போன்ற பிரச்சினைகள் இருக்கும். இதில், பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் அதிகம். வெயில் காலத்தில் போதிய அளவு தண்ணீர் அருந்தாததால் பலருக்கு சிறுநீரகத் தொற்று ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
வார ஓய்வு கிடையாது
'பணிச்சுமையால் வார ஓய்வு இல்லை. வீட்டுக்குச் சென்றாலும் அழைப்புகள் ஓயாது' என்பதால், 'வீட்டுக்கு வந்தும் பணிசெய்ய வேண்டுமா' என பல மருத்துவர்களின் குடும்பத்தில் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மருத்துவமனைக்கு உட்புறம் மட்டுமல்லாது, ஊரகப் பகுதிகளில் களத்தில் சந்தித்த சலால்கள் குறித்து தொண்டாமுத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் கனகராணி கூறும்போது, "தொற்று வேகமாகப் பரவியதால் பாதிக்கப்பட்ட அனைவரையும் கண்டறிந்து, மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்க மிகுந்த சிரமப்பட்டோம்.
சிலர் மருத்துவமனைக்கு போக மாட்டேன் என அடம்பிடித்தனர். தேவை கருதி நள்ளிரவில் நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தபிறகே வீட்டுக்கு சென்றோம். வார ஓய்வு என்பதே இல்லை. கிராமங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்வது கடினமாக இருந்தது. பலர் பரிசோதனைக்கு முன்வரவில்லை. பொதுமக்களுக்குப் புரிய வைத்து பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டி இருந்தது. தற்போது பழங்குடியின மக்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது சவாலாக உள்ளது. அவர்களிடம் இன்னும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு இல்லை. அவர்களுக்கு தடுப்பூசியின் முக்கியத்துவத்தை தெரிவித்து தடுப்பூசி செலுத்தி வருகிறோம்” என்று தெரிவித்தார்.
உடல்நல பாதிப்போடு பணி
மூட்டுத் தேய்மானம் இருப்பதால் தொடர்ந்து நின்றுகொண்டே இருக்க முடியாது. படியேற முடியாது. தவிர சிறுநீரக பாதிப்பும் உள்ளதைப் பொருட்படுத்தாமல் பணியாற்றி வருகிறார் மதுக்கரை அரசு மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் சந்திரகலாராணி. அவர் கூறும்போது, "தொற்றின் தீவிரம் அதிகமாக இருந்ததால் மருத்துவர்களின் தேவை அதிகம் இருந்தது. இதனால், தொடர்ந்து பணியாற்றினேன். உடல்நல பாதிப்பு இருப்பதால், அதற்கு தகுந்தவாறு உணவு உட்கொள்ள வேண்டும். வீட்டில் அதைச் செய்ய முடியும்.
ஆனால், கரோனா வார்டில் பணியாற்றுவோர் 7 நாட்கள் பணிபுரிந்தால், 7 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். தொடர்ந்து 15 நாட்கள் வெளியே தங்குவதால் அங்கு கிடைத்த உணவை உட்கொள்ள வேண்டியிருந்ததால் சிரமப்பட்டேன்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT