Published : 01 Jul 2021 12:39 PM
Last Updated : 01 Jul 2021 12:39 PM
கிருஷ்ணகிரி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் அசோக்குமார் வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில், கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக சார்பில் அசோக்குமார், திமுக, சார்பில் செங்குட்டுவன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இதில், 794 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் அசோக்குமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி, திமுக, வேட்பாளர் செங்குட்டுவன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், வாக்கு எண்ணிக்கையின் போது அசோக்குமார் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில், 605 தபால் வாக்குகளை எண்ணாமல் தேர்தல் அதிகாரி நிராகரித்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், வேட்புமனுவில் தன்னுடைய நிலம் தொடர்பான தகவலை அசோக்குமார் மறைத்துள்ள நிலையிலும், அதை தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொண்டது சட்டவிரோதம் என குறிப்பிட்டுள்ளார். ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளதாகவும், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக தேர்தலில் செலவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டு, அதிமுக வேட்பாளர் அசோக்குமாரின் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு ஓரிரு வாரங்களில் விசாரணைக்கு வரவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT