Published : 01 Jul 2021 12:22 PM
Last Updated : 01 Jul 2021 12:22 PM
புதிய பேருந்துகள் வாங்கும் திட்டத்துக்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளுடன் கூடிய பேருந்துகள் இருப்பதை உறுதி செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது
வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், “கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள், ரயில், பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கடந்த 2016 ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு ஜெர்மன் நாட்டு நிதியுதவியுடன் புதிதாக 4000 பேருந்துகளை வாங்க இருப்பதாகவும், அதில் 10 சதவீத பேருந்துகள் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வசதியுடனும், 25 சதவீத பேருந்துகள் சக்கர நாற்காலி உதவியுடன் மாற்றுத் திறனாளிகளை ஏற்றும் வசதியுடனும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை போன்ற பெருநகர சாலைகளில் இது சாத்தியமற்றது என்றும், சக்கர நாற்காலி மூலம் மாற்றுத் திறனாளிகளை ஏற்றியிறக்க கூடுதல் நேரமாகும். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து பேருந்துகளிலும் தாழ்தள வசதியுடன் இருக்க வேண்டும். எனவே புதிய பேருந்துகள் வாங்கும் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்”. எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது புதிய பேருந்துகள் வாங்கும் திட்டத்துக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். அதேநேரம் மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தில் அனைத்து பேருந்துகளும் தாழ்தள வசதியுடன் இருக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பேருந்துகள் இருப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும், வழக்கு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT