Published : 01 Jul 2021 11:18 AM
Last Updated : 01 Jul 2021 11:18 AM

யூடியூபர் மதன் ஜாமீன் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு

சென்னை

தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விளையாடியது, சிறுவர்களைத் தவறாக வழி நடத்தியது, ஆபாசமாகப் பேசி யூடியூப்பில் காணொலி வெளியிட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

பப்ஜி விளையாட்டு மூலம் பிரபலமானவர் யூ-டியூப் கேம் மதன் என்ற மதன்குமார். இவர் மீது சென்னை புளியந்தோப்பு சைபர் கிரைம் காவல்துறையில் பலர் புகார் அளித்துள்ளனர். அதில் பப்ஜி விளையாட்டு மூலம் சிறுவர் சிறுமிகளுடன் ஆபாசமாக பேசி லட்சக்கணக்கில் பணம் பறித்து உள்ளார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் பிரிவு போலீஸார் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகாமல் தலைமறைவானார். தனது இருப்பிடத்தை கண்டுபிடிக்காதபடி தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தப்பி வந்தார். அவரைத்தேடி வந்த போலீஸார் அவரது மனைவி, தந்தையைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவரது மனைவி பெயரில்தான் யூடியூப் இயங்கி வருவதும், மதனுடன் சேர்ந்து யூடியூப் காணொலியில் பேசுவதும் அவர்தான் என்பதும் தெரியவந்ததன்பேரில் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், தருமபுரியில் தலைமறைவாக இருந்த பப்ஜி மதனை காவல்துறையினர் ஜூன் 18 ஆம் தேதி கைது செய்தனர்.

இதையடுத்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மதனை ஆஜர்படுத்திய போலீஸார் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி மதன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம் ஜூன் 28 ஆம் தேதி உத்தரவிட்டது. அவரது மனைவிக்கு மட்டும் 8 மாத கைக்குழந்தையுடன் இருப்பதை கருத்தில்கொண்டு ஜாமீன் வழங்கியது.

இதனையடுத்து ஜாமீன் கோரி மதன் என்ற மதன்குமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உண்மையில்லை எனவும் எனவே இந்த வழக்கில் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் முன் விசாரணைக்கு வரவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x