Published : 01 Jul 2021 03:14 AM
Last Updated : 01 Jul 2021 03:14 AM
திருப்பூர் பனியன் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு, அவர்களது சம்பளத்தில் பிடித்தம் செய்வதாக தொடர்புடைய நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து சிஐடியு பனியன்தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் ஜி.சம்பத் கூறியதாவது:
கரோனா தடுப்பு ஊரடங்கில், தமிழக அரசு தளர்வு அறிவித்து, திருப்பூர் பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் 100 சதவீத தொழிலாளர்களுடனும், உள்நாட்டு உற்பத்திப் பிரிவு தொழிற்சாலைகள் 33 சதவீதமும் இயங்கலாம் என அனுமதிஅளித்துள்ளது. இந்த நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஒருமாத காலத்துக்குள், தடுப்பூசி செலுத்தப்பட்டதை அந்தந்த நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதற்கேற்ப திருப்பூரில் ஒரு சிலநிறுவனங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பல நிறுவனங்களில், தொழிலாளர்களின் சம்பளத்தில் ரூ. 200 முதல் ரூ.500 வரை பிடித்தம் செய்கின்றனர். இதற்கு சிஐடியு கடும் கண்டனம் தெரிவிக்கிறது. தடுப்பூசிக்கான செலவை தொழிற்சாலை நிர்வாகங்கள் ஏற்றுக்கொள்வதே சரியானது. திருப்பூரில் ஏற்கெனவே வேலையும், வருமானமும் இல்லாமல் நெருக்கடியில்சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களிடம், தடுப்பூசிக்காக சம்பளத்தில் பிடித்தம் செய்வது அநீதியாகும். இதுவரை தடுப்பூசிக்கு என பிடித்தம் செய்த தொகையை, அந்தந்த தொழிலாளர்களிடம் உடனடியாகத் திரும்ப ஒப்படைக்க வேண்டும். தடுப்பூசிக்கு சம்பளத்தில் பிடித்தம்செய்யப்படும் என பனியன் நிறுவன நிர்வாகங்கள் கட்டாயப்படுத்தினால், தொழிலாளர்கள் சிஐடியு சங்கத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இ.எஸ்.ஐ-யிடம் வலியுறுத்தல்
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம் கூறியதாவது: தொழிலாளர்களுக்கு, இ.எஸ்.ஐ. எனப்படும் தொழிலாளர் காப்பீட்டுக் கழகத்தில் சந்தா செலுத்தி வருகிறோம். எனவே, தொழிலாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி என்பதை, இ.எஸ்.ஐ.யிடம் தொடர்ந்து நாங்கள் வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம்.
மத்திய அரசு தொகுப்பில் இருந்து தடுப்பூசிகளைப் பெற்று,தொழிலாளர்களுக்கு செலுத்தவேண்டும். கரோனா தடுப்பூசிக்காக,சில நிறுவனங்கள் தொழிலாளர்களின் சம்பளப் பணத்தில்பிடித்தம் செய்திருக்கலாம். தற்போதைய பொருளாதார சூழலில், மிகவும் சிரமமான சூழ்நிலையை தொழில் நிறுவனங்களும் சந்தித்துள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார். திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 2.5 லட்சம் பேர் வரை, இ.எஸ்.ஐ. எனப்படும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தில் பதிவு செய்திருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT