Published : 09 Jun 2014 09:08 AM
Last Updated : 09 Jun 2014 09:08 AM
சென்னையில் அக்டோபர் மாத இறுதியில் முதலாவது மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி உறுதிபடக் கூறினார்.
கோயம்பேடு அசோக்நகர் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் ஏற்கெனவே நடந்து கொண்டிருக்கிறது. தண்டவாளம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் முடிந்ததால், அசோக்நகர் - ஆலந்தூர் இடையே ஞாயிற்றுக்கிழமை சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ரூ.20 ஆயிரம் கோடி செலவில் இருவழித் தடங்களில் 45 கிலோ மீட்டர் நீளத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதலாவது மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தை முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு நவம்பர் 6-ம் தேதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து அங்குள்ள 800 மீட்டர் நீள `டெஸ்ட் டிராக்’கில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடந்தது.
பின்னர் கோயம்பேடு பணிமனையில் இருந்து கோயம்பேடு ரயில் நிலையம் வரை 1.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாய்தளம் மற்றும் பறக்கும் பாதையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடந்தது. பின்னர் கோயம்பேடு அசோக்நகர் இடையே 5.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு பறக்கும் பாதையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
இதற்கிடையே அசோக்நகர் ஆலந்தூர் இடையே தண்டவாளம் அமைக்கப்பட்டு, மின் இணைப்பு பணியும் முடிந்தததால், அசோக்நகர் ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
அப்போது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் பி.கே.பன்சால், உயர் அதிகாரிகள், மெட்ரோ ரயில் பெட்டிகள் தயாரித்துக் கொடுக்கும் ஆல்டாப் நிறுவன அதிகாரிகள், எல் அண்ட் டி கட்டுமான நிறுவன அதிகாரிகள் ஆகியோர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டனர்.
“இனிமேல் கோயம்பேடு ஆலந்தூர் இடையே வழக்கமான சோதனை ஓட்டம் நடைபெறும்” என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. கோயம்பேடு ஆலந்தூர் இடையே வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடந்ததைத் தொடர்ந்து மெட்ரோ ரயில் பணியாளர்கள் கேக் வெட்டி மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோயம்பேடு ஆலந்தூர் இடையே சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியன் ரயில்வேயில் உள்ள ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் தர அமைப்பை (ஆர்.டி.எஸ்.ஓ.) சேர்ந்த நிர்வாகிகள் சோதனை ஓட்டம் நடத்த உள்ளனர். அதைத் தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் எஸ்.கே.மிட்டல், மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் மெட்ரோ ரயிலை இயக்கி சோதனை மேற்கொள்வார். அவர் ஒப்புதல் அளித்த பிறகு சென்னையில் முதலாவது மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கும் தேதியை தமிழக அரசு இறுதி செய்யும். வரும் அக்டோபர் இறுதியில் அல்லது நவம்பர் முதல் வாரத்தில் சென்னையில் மெட்ரோ ரயில்கள் ஓடும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
தொடக்கத்தில் கோயம்பேடு பரங்கிமலை இடையே 11 கிலோ மீட்டர் தூரத்துக்கு முதலாவது மெட்ரோ ரயிலை இயக்கத் திட்டமிடப்பட்டது. பரங்கிமலையில் எக்ஸ்பிரஸ் ரயில், பறக்கும் ரயில், புறநகர் ரயில், மெட்ரோ ரயில் ஆகிய 4 வகையான ரயில் போக்குவரத்தும் இருக்கும் என்பதால், அங்கு மெட்ரோ ரயில் நிலையம் பிரம்மாண்டமாகக் கட்டப்படுகிறது. அந்த ரயில் நிலையம் கட்டுவதற்கு தாமதமாகும் என்பதால், கோயம்பேடு ஆலந்தூர் இடையே 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு முதல் மெட்ரோ ரயில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
42 மெட்ரோ ரயில்கள்
முதல்கட்ட மெட்ரோ ரயில் போக்குவரத்துக்காக தலா 4 பெட்டிகள் கொண்ட 42 குளுகுளு மெட்ரோ ரயில்களை தயாரித்துக் கொடுக்க பிரேசில் நாட்டு நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. அதன்படி, மொத்தம் 168 பெட்டிகள் தயாரித்துக் கொடுக்க வேண்டும். ஒரு பெட்டியின் விலை ரூ.8 கோடி. ஒப்பந்தப்படி பிரேசில் நாட்டில் இருந்து 9 மெட்ரோ ரயில்கள் இறக்குமதி செய்யப்படும். ஏற்கெனவே 7 ரயில்கள் வந்துவிட்டன. கடைசியாக ஞாயிற்றுக்கிழமை 2 ரயில்கள் வந்ததால் பிரேசிலில் இருந்து வர வேண்டிய 9 ரயில்களும் வந்துவிட்டன. மீதமுள்ள 33 ரயில்கள், ஆந்திர மாநிலம், சிட்டியில் இருந்து வர வேண்டும். இங்கிருந்து இதுவரை 3 ரயில்கள் வந்துவிட்டன. 30 ரயில்கள் வர வேண்டியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT