Published : 01 Jul 2021 03:18 AM
Last Updated : 01 Jul 2021 03:18 AM
விஐடி பல்கலைக் கழகத்தில் இயங்கி வந்த கரோனா சித்த சிறப்பு சிகிச்சை மையம் நேற்றுடன் மூடப்பட்டது. 3-வது அலை பாதிப்பு வரும் என மருத்துவ நிபுணர் குழு வினர் எச்சரித்துள்ளதால், எப் போதும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சித்த மருத்துவர் தில்லைவாணன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் கரோனா 2-வது அலையில் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி, விஐடி பல்கலைக்கழகம், வேலூர் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.
தற்போது, கரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரியில் செயல்பட்டு வந்த கரோனா சிகிச்சை மையம் கடந்த வாரம் மூடப்பட்டது. அதேநேரத்தில், விஐடி பல்கலைக்கழகத்தில் கரோனா நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த மையத்தில், கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகள், அறிகுறிகள் இல்லாத அல்லது லேசான மற்றும் மிதமான அறிகுறிகள் உடைய கரோனா தொற்று உறுதிப்படுத்திய பிறகு வருவோர்களுக்கும், தும்மல், சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் ஆரம்பித்த உடனேயே வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சித்த மருந்துவ முறைப்படி கரோனா தொற்றாளர்களுக்கு, நீராவி பிடித்தல், மன அழுத் தத்தைக் குறைக்க யோகாசனப் பயிற்சி, சூரிய நமஸ்காரம், ஆக்சிஜன் அளவு குறையாமல் இருக்க தனித்துவமான மருந்துகள் கலந்து கிராம்பு குடிநீர், வைட்டமின் டி அதிகரிக்க சூரிய குளியல், பெரும் கவலையை மறக்க ஊஞ்சல் ஆட்டம், சத்துள்ள உணவு வகைகள், மூலிகை தேநீர், சுவாசக் கோளாறுகளை தடுக்க தூதுவளை, துளசி, கற்பூரவள்ளி, புதினா, கொத்தமல்லி இலை ஆகியவை கொண்ட மூலிகை சூப் வகைகள், மன அமைதிக்கு எட்டு வடிவிலான நடைபாதையில் நடைபயிற்சி, சான்றோர்களின் அறிவுரைகள் அடங்கிய புத்தகங்களுடன் கூடிய நூலகம் ஆகியவை இந்த மையத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
வேலூர் மாவட்டத்தில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 296 பேர் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில், 280 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மீதமுள்ள 16 பேர் மூச்சுத் திணறல் காரணமாக மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சிகிச்சை மையத்தில் அனைவரும் குணமடைந்ததால் நேற்று இந்த மையமும் மூடப்பட்டது.
தமிழகத்தில் கரோனா 3-வது அலை எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளதால், தொடர்ந்து விஐடி சித்த மருத்துவ சிகிச்சை மையம் தயார் நிலையில் வைக்கப்படும் என சித்த மருத்துவர் தில்லைவாணன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT