Published : 30 Jun 2021 06:38 PM
Last Updated : 30 Jun 2021 06:38 PM

அவர் முருகேசன் அல்ல, முறுக்கேசன்: கைதான நேரத்திலும் சுவாரஸ்யம் காட்டிய கருணாநிதி

சென்னை

திமுக தலைவர் கருணாநிதியை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்து இன்றோடு 20 ஆண்டுகள் ஆகின்றன. தன் கையை முறுக்கி, தூக்கிச் சென்ற முருகேசன் என்கிற உதவி ஆணையர் பற்றி அப்போது பேட்டி அளித்த கருணாநிதி, அவர் முருகேசன் அல்ல முறுக்கேசன் என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியச் சம்பவமாக விளங்குவது முன்னாள் முதல்வர், கட்சியின் தலைவர், மிக மூத்த அரசியல்வாதி என்கிற எந்தவிதத் தகுதியையும் கண்டுகொள்ளாமல், தப்பிக்கப் பார்க்கும் குற்றவாளியைக் கைது செய்வதுபோல் நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்தது காவல்துறை. உடை மாற்றக்கூட அவகாசம் தரவில்லை என்று கருணாநிதி பிறகு பேட்டியில் தெரிவித்தார்.

அந்த அளவுக்கு மோசமாக நடந்த அந்த நள்ளிரவுக் கைது நடந்து இன்றோடு 20 ஆண்டுகள் ஆகின்றன. இதில் சிறப்பு என்னவென்றால் அன்று கைது சம்பவத்தில் கடமையாற்றிய காவல் அதிகாரிகளைப் பிறகு திமுக தலைவர் பழிவாங்கவில்லை.

திமுக ஆட்சி முடிந்து அதிமுக ஆட்சி 2001ஆம் ஆண்டு வந்தது. வந்த சில மாதங்களில் திடீரென ஒருநாள் நள்ளிரவில் சிஐடி காலனியில் தங்கியிருந்த திமுக தலைவர் கருணாநிதி வீட்டிற்குள் போலீஸ் தடதடவென்று நுழைந்தது. கருணாநிதியைப் பார்க்க வேண்டும் என்று சொன்னார் அதிகாரி.

போலீஸின் தோரணையைக் கண்ட வீட்டிலுள்ளோர் முரசொலி மாறன் உள்ளிட்டோருக்குத் தகவல் தெரிவித்தனர். கைது செய்யப்போவதாக அதிகாரி கூறினார். மாறன் உள்ளிட்டோர் வந்து போலீஸ் அதிகாரிகளிடம் பேசினர். ஒரு கட்டத்தில் கருணாநிதியை எப்படியாவது அழைத்துச் செல்ல வேண்டும் என்பதில் போலீஸ் உறுதியாக இருந்தது.

முரசொலி மாறன் போலீஸ் அதிகாரி முகமது அலியிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கும்போதே உதவி கமிஷனர் முருகேசன் கருணாநிதியின் பின்புறம் இரண்டு கைகளுக்கிடையே தனது கைகளைக் கொடுத்து தூக்கி, தரதரவென படிக்கட்டில் தூக்கிச் சென்று காரில் ஏற்றினார். பிறகு சிபிசிஐடி அலுவலகத்திற்கு கருணாநிதி அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்தச் சம்பவத்தால் தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டம் நடத்தினர். ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். திமுக தலைவர் கைது செய்யப்பட்டதை மாநில மனித உரிமை ஆணையம் உடனடியாகக் கையில் எடுத்து விசாரித்தது. தனது கைது, அதன்பின் விடுதலைக்குப் பின் உடல் நலிவுற்ற நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் திமுக தலைவர் கருணாநிதி.

கைது செய்து தூக்கிச் செல்லப்பட்டவிதம் குறித்துக் கேட்டபோது தனது முழங்கை முறுக்கப்பட்டதால் உடல் வலி உள்ளதாகத் தெரிவித்த கருணாநிதி, அந்த வலியிலும் தனது வழக்கமான பாணியில் உதவி கமிஷனர் முருகேசன் பெயரைக் குறிப்பிட்டு, அவர் முருகேசன் அல்ல முறுக்கேசன் என்று குறிப்பிட்டு செய்தியாளர் சந்திப்பைச் சிரிப்பலையில் ஆழ்த்தினார்.

தந்தையின் கைது சம்பவத்தின் 20ஆம் ஆண்டு இன்று என்பதால் கனிமொழி அதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“மறக்க முடியாத தினம். 30.06.2001. சென்னை சிறைச்சாலை வாசலில் இந்தப் போராளியிடம் கற்றுக்கொண்ட பாடம் 'அச்சம் கடந்தவர்களுக்கு சிறையும் சிம்மாசனமும் ஒன்றுதான்'. தனியாக அவரோடு அமர்ந்திருந்தாலும் ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகள் அவருக்காக தடியடிக்கு நடுவே போராடிக்கொண்டிருந்தார்கள்”.

இவ்வாறு கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x