Published : 30 Jun 2021 05:33 PM
Last Updated : 30 Jun 2021 05:33 PM
''சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 2010 டிசம்பரில் அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது என்று சொல்கிறார். 2010 டிசம்பரில் திமுக ஆட்சி இருந்தது. அதிமுக ஆட்சியில் இல்லை. அவரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டார். ஆகவே, நீட் தேர்வைக் கொண்டுவந்தது திமுக ஆட்சிதான். அதைத் தடுத்து நிறுத்தியவர் ஜெயலலிதா'' என்று எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.
நீட் தேர்வில் 7.5% போதாதா, ஏன் நீதிபதி கமிட்டி என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, ''7.5% இட ஒதுக்கீட்டைச் சட்டப்பேரவையில் கொண்டுவந்தபோது திமுக தலைவரும் அதை ஆதரித்தார். எங்கள் கோரிக்கை 10% ஆகும். ஆனால் இது மட்டும் போதாது. அனைத்துத் தரப்பு மாணவர்களும் பயன்பெற வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு, நுழைவுத் தேர்வை எப்போதும் திமுக ஆதரிக்காது'' என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஒருபோதும் நீட் இட ஒதுக்கீடு குறித்து திமுக கோரிக்கை வைக்கவில்லை என்று மறுத்தார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் இன்று எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி:
“நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு அளித்தது பற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறிப்பிட்டார். திமுக தலைவர் வேண்டுகோளில்தான் நான் 7.5% இட ஒதுக்கீடு கொண்டு வந்தேன் என்று கூறியுள்ளார். அது பச்சைப் பொய். எதிர்க்கட்சியும் கோரிக்கை வைக்கவில்லை, பொதுமக்களும் கோரிக்கை வைக்கவில்லை என்று நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்.
நீட் தேர்வினால் கிராமப் புறம் முதல் நகரம் வரை அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அப்படி பாதிக்கப்படக்கூடிய மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு மூலமாக மருத்துவக் கல்வியில் இடம் கிடைக்கும் என்பதற்காகத்தான் கொண்டுவந்தோம். இது யாருடைய கோரிக்கையும் இல்லை. உங்களுக்கு நன்றாகத் தெரியும். பத்திரிகைகள், ஊடகத்தினருக்குத் தெரியும்.
ஆனால், திமுக தலைவர் கோரிக்கை வைத்ததால் கொண்டுவந்தோம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சொல்கிறார். அத்தனையும் பச்சைப் பொய். ஸ்டாலின் எந்த இடத்திலும் அப்படிக் கோரிக்கை வைக்கவில்லை. பொதுமக்களும் கோரிக்கை வைக்கவில்லை.
அதிக அளவில் ஏழை எளிய மக்கள் அரசுப் பள்ளியில் படிக்கிறார்கள். அவர்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக 7.5% உள் ஒதுக்கீட்டைக் கொண்டுவந்து மருத்துவம் பயிலும் வாய்ப்பை உருவாக்கித் தந்தோம். கல்விக் கட்டணத்தையும் அரசே கட்டும் என்கிற அறிவிப்பையும் அளித்து நிறைவேற்றித் தந்தோம். பொய்யான தகவலை அமைச்சர் பரப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
அதேபோல் சுகாதாரத்துறை அமைச்சர் 2010 டிசம்பரில் அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது என்று சொல்கிறார். 2010 டிசம்பரில் திமுக ஆட்சி இருந்தது. அதிமுக ஆட்சியில் இல்லை. அவரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டார். இதன் மூலம் அவரே ஒப்புக்கொள்கிறார். ஆகவே நீட் தேர்வைக் கொண்டுவந்தது திமுக ஆட்சிதான். அதைத் தடுத்து நிறுத்தியவர் ஜெயலலிதா. அதிமுக ஆட்சியில் தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு காரணமாக வேறு வழியில்லாமல் அரசு கொண்டுவந்தது”.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT