Published : 30 Jun 2021 04:44 PM
Last Updated : 30 Jun 2021 04:44 PM
அணில்கள் ஒழிக்கப்பட்டதால் இனிமேல் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறும்போது, ''ஜெயலலிதாவின் வேலைக்காரராக சசிகலா இருந்தார். ஜெயலலிதா இறந்தபின் சசிகலா சென்றுவிட்டார். தற்போது வலுவான எதிர்க்கட்சியாக அதிமுக உள்ளது. அதிமுகவிற்கும், திமுகவிற்கும் 3 சதவீத வாக்கு வித்தியாசம்தான். பினாமி கட்சியான தினகரனை வெற்றிபெற வைக்க முடியவில்லை. இவர் (சசிகலா) அதிமுகவைக் கைப்பற்றப் போகிறாராம்.
மத்திய தணிக்கைத் துறை அறிக்கையை திமுக ஏற்றுக் கொள்கிறதா? ரூ.1.75 லட்சம் கோடி முறைகேடு நடைபெற்றதாக மத்திய தணிக்கைத் துறை கூறியிருந்த நிலையில் ஆ.ராசாவும் கனிமொழியும் சிறையில் இருந்து தற்போது பிணையில் உள்ளனர்.
இது தொடர்பான மேல் முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மத்திய தணிக்கைத் துறையின் அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக இருந்தால் ஏன் ஆ.ராசா, கனிமொழி மீது ஏன் கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கவில்லை?
அணில்கள் ஒழிக்கப்பட்டதால் இனிமேல் மக்கள் அச்சப்படத் தேவையில்லை
தற்போது மின்சார வாரியம் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டுள்ளது. எல்லா அணில்களையும் பிடித்துவிட்டார்கள். இனிமேல் மக்கள் அச்சப்படத் தேவையில்லை. இன்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறிய செய்தி வெளியாகியுள்ளது. பராமரிப்புப் பணிகள் முடிந்து, அணில்கள் ஒழிக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் கூறியுள்ளார். மிக்க நன்றி'' என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT