Published : 30 Jun 2021 03:32 PM
Last Updated : 30 Jun 2021 03:32 PM
இதுவரை திமுக அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் எந்தவித விலைக் குறைப்பையும் செய்யாதது ஏமாற்றம் அளிக்கிறது. அதோடு சேர்ந்து கட்டுமானப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சேலம், ஓமலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
“தேர்தல் நேரத்தில் சுமார் 505 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அந்த 505 அறிவிப்புகளில் ஒருசிலவற்றை இன்றைக்கு நிறைவேற்றியுள்ளதாக திமுக அரசு அறிவித்துள்ளது. குறிப்பாகச் சொல்லவேண்டுமானால் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைப்பதாக அறிவித்தார்கள்.
நானும் சட்டப்பேரவையில் இதுகுறித்துப் பேசினேன். ஆனால், இதுவரை திமுக அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் எந்தவித விலைக் குறைப்பையும் செய்யாதது ஏமாற்றம் அளிக்கிறது. அதோடு சேர்ந்து கட்டுமானப்பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. சிமென்ட், கம்பி, செங்கல், எம்.சாண்ட், ஜல்லி விலை ஒட்டுமொத்தமாக உயர்ந்து அத்துறையில் உள்ள தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ளது.
திமுக தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தவுடன் அத்தியாவசியப் பொருட்களில் இதைச் சேர்ப்போம் என்று சொன்னார்கள். அதை உடனடியாகச் செய்யவேண்டும். அதேபோல் சிமென்ட் விலை உயர்ந்துள்ளது. இதேபோன்ற நிலை ஜெயலலிதா ஆட்சியில் வந்தபோது சிமென்ட் விலையை கட்டுப்படுத்த அம்மா சிமென்ட் குறைந்த விலையில் ஏழை எளிய நடுத்தர மக்கள் வீடுகட்ட வழங்கப்பட்டது. அதை அதிக அளவில் வழங்க வேண்டும்.
தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. மத்திய அரசிடம் தடுப்பூசி பெற்றுப் போடுகிறார்கள். தடுப்பூசி போட மையத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுகிறார்கள். அங்கு 200, 300 பேருக்கு மட்டும் போட்டுவிட்டுத் தடுப்பூசி இல்லை எனத் திருப்பி அனுப்புகிறார்கள். நாங்கள் கேட்பது ஒவ்வொரு மையத்திலும் எவ்வளவு தடுப்பூசி உள்ளது என்று முன்கூட்டியே போர்டு வைத்து, முந்தைய நாளிலேயே டோக்கன் கொடுத்துப் போடவேண்டும். இதன் மூலம் பல மணி நேரம் மக்கள் காத்திருந்து செல்லும் நிலையைத் தவிர்க்கலாம்”.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT