Published : 30 Jun 2021 03:15 PM
Last Updated : 30 Jun 2021 03:15 PM
பைனான்சியர் போத்ரா, திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு எதிராகத் தொடர்ந்த அவதூறு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இயக்குநரும், நடிகருமான சசிகுமாரின் பட நிறுவனத்தில் இணை தயாரிப்பாளராக இருந்த அவரின் உறவினர் அசோக்குமார் கடன் தொல்லை காரணமாக 2017ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த நிலையில் அசோக்குமார் தற்கொலை செய்துகொண்டது குறித்தும், சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா குறித்தும் ஞானவேல்ராஜா வாரப் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். அதில், சினிமா பைனான்சியர் போத்ராவைக் குறிப்பிட்டு பைனான்சியர்கள் கெடுபிடியாக நடந்து கொள்கிறார்கள் என்று கருத்துகளைத் தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து, ஞானவேல்ராஜா, மற்றும் பேட்டியை பிரசுரித்த வார இதழ், அதன் ஆசிரியர் உள்ளிட்டோர் மீது பைனான்சியர் போத்ரா, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கைத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஞானவேல்ராஜா 2019ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில் திரைத்துறையில் நிலவும் நிலையைத்தான் பேட்டியாக அளித்ததாகவும், தன் மீதான வழக்கில் முகாந்திரம் இல்லை என்பதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா இறந்துவிட்ட நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. ஞானவேல்ராஜா மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, அவதூறு வழக்கை ரத்துசெயது நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT