Published : 30 Jun 2021 12:35 PM
Last Updated : 30 Jun 2021 12:35 PM
தமிழக முதல்வரின் உத்தரவுக்கிணங்க, தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் காசநோய்க் கிருமி கட்டுப்படுத்தும் ஆய்வகத்தினை இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (ஜூன் 30) தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் காசநோய்க் கிருமி கட்டுப்படுத்தும் ஆய்வகத்தினைத் திறந்துவைத்துப் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது:
"பல்லாயிரம் ஆண்டுகளாக காசநோய் மனித குலத்தை பாதித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, இந்தியாவில் இதன் பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. ஒவ்வொரு வருடமும் உலகில் நிகழக்கூடிய காசநோய்களில் 25 விழுக்காட்டுக்கும் மேலாக இந்தியாவில் ஏற்படுகிறது.
சமுதாயத்தில் காசநோய் தொற்று உள்ளவர்களை உடனடியாகக் கண்டுபிடித்து சிகிச்சை செய்யாவிட்டால், அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதால், இந்த காசநோயின் தாக்கத்தை நம்மிடமிருந்து ஒழிக்க இயலாமல் இருக்கிறது. 2025ஆம் ஆண்டுக்குள் இந்த காசநோயை ஒழிக்க வேண்டும் என்று தமிழக அரசு உறுதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
காசநோய் பாதிப்பின் முக்கியமான அறிகுறிகள், இரு வாரங்களுக்கு மேலாக சளி, இருமல், காய்ச்சல், பசியின்மை, எடை குறைதல் ஆகியன. இத்தகைய அறிகுறி இருப்பவர்களுக்கு சளி பரிசோதனையுடன், மார்பு எக்ஸ்ரே பரிசோதனை செய்வதன் மூலமாக ஆரம்ப நிலையிலேயே காசநோயைக் கண்டுபிடித்து குணப்படுத்துதல் எளிதாக இருக்கும்.
எக்ஸ்ரே வசதி இல்லாத ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மாதத்தில் ஒரு குறிப்பிட்ட தினத்தில் இத்தகைய நடமாடும் எக்ஸ்ரே காசநோய் கண்டுபிடிப்பு வாகனத்தை அனுப்பி காசநோய் அறிகுறி உள்ளவர்களுக்கு மார்பு எக்ஸ்ரே எடுப்பதன் மூலம் காசநோய் தொற்றை விரைவில் கண்டுபிடித்து குணப்படுத்த முடியும் என்பதை ஆய்வின் மூலமாக அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை நிரூபித்து 2019ஆம் ஆண்டு சென்னையில் நடந்த தேசிய காசநோய் மாநாட்டில் ஆராய்ச்சிக் கட்டுரையாக வெளியிடப்பட்டது.
இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும் பொருட்டு, ரோட்டரி மாவட்டம் 3,231 மற்றும் ரோட்டரி உலக பங்களிப்பு மற்றும் ரோட்டரி தாம்பரம் மத்திய சங்கத்தின் மூலமாக நடமாடும் எக்ஸ்ரே காசநோய் கண்டுபிடிப்பு வாகனம் ரூ.90 லட்சம் செலவில் அதிநவீன காசநோய் கண்டுபிடிப்பு வசதியுடன் தயாரிக்கப்பட்டு இன்று மக்கள் பயன்பெறும் வகையில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
மிகவும் திறனுள்ள டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய எக்ஸ்ரே கருவி இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு எக்ஸ்ரே எடுத்தவுடன் அந்த ஊடுகதிர் படம் வாகனத்தில் உள்ள டிஜிட்டல் திரையில் தோன்றும். அதை அங்கேயே பார்த்து நோயைக் கண்டறியலாம். மருத்துவர்கள் இல்லாத சூழ்நிலையில் இந்த பிம்பம் மின்னஞ்சல் மூலமாகத் தொலைதூரத்தில் இருக்கும் மருத்துவர்களுக்கு அனுப்பி அதை ஆய்ந்தறியும் வசதியும் இந்த வாகனத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
காசநோய் சளியிலிருந்து கண்டுபிடிக்கும் நவீன பரிசோதனைக் கருவிகளையும், இந்த வாகனத்திற்குள்ளேயே எடுத்துச் சென்று இரண்டு மணி நேரத்திற்குள் இந்த சளி மாதிரிகளில் இருக்கும் காசநோயைக் கண்டறியும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
காசநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது மட்டுமல்லாமல் மக்களுக்கு உண்டாகக்கூடிய பிற நெஞ்சக நோய்களையும், இந்த எக்ஸ்ரே படங்களின் மூலமாகக் கண்டுபிடித்து குணப்படுத்த உறுதுணையாக இருக்கும். தாம்பரம் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனைக்கு அருகிலுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் காசநோய் கண்டுபிடிப்புப் பணியில் இந்த வாகனத்தை உபயோகப்படுத்திட அரசு ஆணையிட்டுள்ளது".
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT