Published : 30 Jun 2021 03:14 AM
Last Updated : 30 Jun 2021 03:14 AM
ஆவின் பால் உபபொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் கூறினார்.
திருவள்ளூரில் நெடுஞ்சாலை கள், சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பையால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டைத் தடுக்கும் வகையில் `தூய்மை திருவள்ளூர்’ திட்டம் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. இதன் முதல்கட்டமாக ஜூலை 4-ம் தேதி வரைசாலையோரங்களில் குப்பையைஅகற்றும் பணிகள் தொடங்கப்பட் டுள்ளன.
பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பாரிவாக்கம் சாலை சந்திப்பு, குளக்கரை, திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட கோலடி பிரதான சாலை பகுதிகளில் குப்பை அகற்றும் பணியை நேற்று பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு செய்தார். தொடர்ந்து, பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் உள்ள உரக்குடில் மற்றும் கட்டணக் கழிப்பறையையும் அவர் ஆய்வு செய்தார்.
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் தினமும் சராசரியாக 360 டன் குப்பை அகற்றும் நிலையில், தூய்மை திருவள்ளூர் திட்டத்தின் மூலம் 120 டன் குப்பை கூடுதலாக அகற்றப்பட்டு வருகிறது. மாவட்டத்தை குப்பை இல்லா மாவட்டமாக மாற்ற இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் நீர்நிலைகளில் தேங்கும் குப்பையை அகற்றி, தூய்மையாக வைத்துக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, பாதாள சாக்கடைத் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
கடந்த 10 ஆண்டுகளாக ஆவின் பால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது சிங்கப்பூர், மலேசியா, சவுதி உள்ளிட்ட நாடுகளுக்கு ஆவின் பால் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. மேலும், கிழக்காசிய, மேற்கத்திய நாடுகளும் ஆவின் பாலை ஏற்றுமதி செய்யுமாறு கேட்டுள்ளன. அந்த நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்டு, ஆவின் பாலை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், ஆவின் பால் மூலம் தயாரிக்கப்படும் 152 உப பொருட்களை 20 நாட்களில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி, நகராட்சி ஆணையர்கள் ரவிச் சந்திரன், வசந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT