Published : 29 Jun 2021 09:48 PM
Last Updated : 29 Jun 2021 09:48 PM
திருப்பத்தூர் மாவட்டத்தில் கிராமங்களை முன்னேற்ற வேண்டிய அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வசதியாக திட்ட அறிக்கையை தயார் செய்ய வேண்டும். 6 கிராமங்களை தேர்வு செய்து அங்கு அனைத்து வளர்ச்சி திட்டங்களையும் செயல்படுத்தினால் அந்த கிராமத்தை முன்னேற்றபாதைக்கு கொண்டு செல்ல முடியும் என்று ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில், மத்திய, மாநில அரசுத் திட்டங்களை முறையாக செயல்படுத்தி கிராமங்களை வளர்ச்சியடைய வேண்டிய திட்ட அறிக்கையை தயாரிப்பது தொடர்பான அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாலை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமை வகித்து பேசியதாவது:
“திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்து கிராமப்பகுதிகளின் மக்களின் வாழ்க்கை, பொருளாதார மேம்பாடு, கல்வி, பொது சுகாதாரம், வேலைவாய்ப்பு, சுயதொழில் மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவது தான் கிராம வளர்ச்சித் திட்டம் என்பதாகும்.
இந்த திட்டத்தை திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 6 ஒன்றியங்களில் தலா ஒரு ஊராட்சியில் ஒரு கிராமம் வீதம் 6 கிராமங்களை தேர்வு செய்து அங்கு மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் பெரும்பான்மையான திட்டங்களை மக்களுக்கும், ஊராட்சிகளுக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பல பணிகளை இணைத்து கிராம ஊராட்சிகளில் செயல்படுத்த வேண்டும். இத்திட்டத்தில் பல துறைகளின் திட்டங்களை அந்த கிராமங்களில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளலாம். ஊரக வளர்ச்சி, வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை, வனத்துறை, நீர் வளம், வருவாய்த்துறை உட்பட அனைத்து துறைகளில் உள்ள திட்டங்களை இங்கு செயல்படுத்த வேண்டும்.
இதற்காக முதலில் 6 ஊராட்சிகளை தேர்வு செய்து, அங்கு நேரடியாக ஆய்வு செய்து அங்குள்ள மக்களின் தேவை, கிராமத்தின் தேவை குறித்து அறித்து அதற்காக திட்டங்களை முதலில் மேற்கொள்ள வேண்டும்.
தனிநபர் முன்னேற்றம், குழு முன்னேற்றம், வருமான முன்னேற்றம், கிராமத்தின் கட்டமைப்பு மேம்படுத்துதல், சமூக முன்னேற்றம், கல்வி சுகாதார வளர்ச்சி, சட்டம்- ஒழுங்கு பிரச்னை, விவசாய நிலம் மேம்பாடு, விவசாயத்தை பெருக்குதல், இயற்கையை பாதுகாத்தல், வேலை வாய்ப்பு மற்றும் சுயதொழில் தொடங்குவது போன்றவற்றை உருவாக்கி அதன் மூலமாக அந்த கிராமத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லலாம்.
அனைத்து துறைகளும் இணைந்து கிராமத்தின் தேவை மற்றும் மக்களின் தேவையை அறிந்து திட்ட அறிக்கையை தயார் செய்து, அதை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விரைவாக சமர்ப்பிக்க வேண்டும். முறையாக செயல்படுத்தினால் அடுத்த 4, 5 ஆண்டுகளில் கிராம ஊராட்சிகள் கட்டாயமாக ஒரு முழுமை பெற்ற கிராமமாக உருவெடுக்கும்.
அதன் மூலம் கிராம மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். எனவே அனைவரும் இத்திட்டத்துக்கு முழுமையாக ஆயவு செய்து திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அதன் வளர்ச்சியைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’’.இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேஷ்குமார், மகளிர் திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT