Published : 29 Jun 2021 09:08 PM
Last Updated : 29 Jun 2021 09:08 PM
காவலர்களின் திறனை மேம்படுத்துவதோடு, சட்ட விரோதச் செயல்களை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஎஸ்பிக்களுக்கு கோவை சரக டிஐஜி முத்துசாமி உத்தரவிட்டுள்ளார்.
கோவை மேற்கு மண்டல காவல்துறைக்குட்பட்ட கோவை சரக காவல்துறை நிர்வாகத்தின் கீழ், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்கள் உள்ளன.
மாவட்டங்கள் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலும், இதில் உள்ள உட்கோட்டங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு டிஎஸ்பி தலைமையிலும் இயங்கி வருகிறது. அடிதடி, திருட்டு, தகராறு, வழிப்பறி போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இந்த உட்கோட்டங்களுக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் தினமும் புகார்கள் பெறப்படுகின்றன.
இந்த புகார்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேற்கு மண்டலத்தில் உள்ள இரண்டு சரகங்களில் கோவை சரகம் முக்கியமானதாகும். இங்கு கேரளா எல்லையை ஒட்டியவாறு கோவை மாவட்டமும், தமிழகம்-கேரளா-கர்நாடகம் ஆகிய மூன்று மாநில எல்லையை ஒட்டியுள்ள நீலகிரி ஆகிய முக்கிய மாவட்டங்கள் உள்ளன. காவல்துறையினர் சற்று அசந்தாலும், மாவோயிஸ்ட்கள், நடமாட்டம், நக்சலைட்டுகளின் நடமாட்டம் போன்றவை தலைதூக்கிவிடும்.
இந்தச் சூழலில், கோவை சரக டிஐஜியாக சமீபத்தில் பொறுப்பேற்ற, டிஐஜி முத்துசாமி, தன சரகத்துக்குட்பட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்களுக்கு (டிஎஸ்பி) ஆய்வுக் கூட்டம் நடத்தி, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, குற்றச் சம்பவங்கள் தடுப்பு தொடர்பாக பல்வேறு உத்தரவுகளை தெரிவித்து உள்ளார்.
திறனை மேம்படுத்த வேண்டும்
டிஎஸ்பிக்களுக்கு பிறப்பித்த உத்தரவு தொடர்பாக கோவை சரக டிஐஜி முத்துசாமி இன்று ( ஜூன் 29) ‘இந்து தமிழ்திசை’ செய்தியாளரிடம் கூறும்போது,‘‘ பொதுமக்கள், காவல்துறையினர் நல்லுறவை மேம்படுத்த வேண்டும். தனது பொறுப்பை உணர்ந்து சரிவர பணியாற்றாத காவலர்களை கண்டறிந்து அவர்களுக்கு, முதலில் தனது பணியின் பொறுப்பு குறித்தும், எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் எடுத்துக் கூறி அவர்களது திறனை மேம்படுத்த வேண்டும். பணியின் பொறுப்பை உணர்ந்து அவர்கள் திறம்பட பணியாற்ற அந்த அறிவுரை உதவும். சூதாட்டம், லாட்டரி சீட்டு விற்பனை, கள்ளச்சந்தையில் மது விற்பனை, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை போன்ற சட்ட விரோதச் செயல்கள் அனைத்தையும் தடுக்க காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றச் சம்பவங்களைத் தடுக்க கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்த வேண்டும்.
இந்தப் பணிகள் தொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் தினமும் கண்காணிப்பர். நான் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை இந்த பணியின் செயல்பாடுகளை ஆய்வு செய்வேன். காவல்நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் மக்களை கனிவுடன் நடத்த வேண்டும். பொதுமக்கள் அளிக்க வரும் புகார்களை உடனடியாக பெற வேண்டும். சிஎஸ்ஆர் பதிவு அல்லது தேவைப்படும் புகார்களுக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு கட்டாயம் செய்ய வேண்டும்.
புகாரை பெற்றுக் கொண்டு, அதை பதிவு செய்யாமல் இருக்கக்கூடாது. அதேபோல், இருக்கும் காவலர்களின் எண்ணிக்கையைக் கொண்டு கண்காணிப்புப் பணியை முறையாக செய்ய வேண்டும். பாதுகாப்பு, வாகனத் தணிக்கை பணிகளுக்கு பற்றாக்குறையாக உள்ள காவல் நிலையங்களில் இருந்து காவலர்களை அனுப்பாமல், உபரியாக உள்ள காவல் நிலையங்களில் இருந்து காவலர்களை அனுப்பி சூழலுக்கு ஏற்ப காவலர்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளேன்.
அதேபோல், காவல் நிலையங்களின் செயல்பாடு குறித்தும் நேரடியாக ஆய்வு செய்து வருகிறேன்,’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT