Published : 29 Jun 2021 05:18 PM
Last Updated : 29 Jun 2021 05:18 PM
இலங்கைத் தமிழர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றித் தருவார் என்று மாநில சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தெரிவித்துள்ளார்.
திருச்சி வாழவந்தான்கோட்டை மற்றும் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம்களில் அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் இன்று நேரில் ஆய்வு நடத்தினார்.
அப்போது, முகாம்வாசிகள் பல்வேறு கோரிக்கைகளை அமைச்சரிடம் முன்வைத்தனர். அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் கூறியதாவது:
''மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து செயல்படுத்தும் ஆட்சிதான் தற்போது தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. முகாம்வாசிகள் விடுத்த கோரிக்கைகளில் 75 சதவீதம் அடுத்த மாதத்தில் நடைமுறையில் உள்ள நிலை உருவாகும். தமிழ்நாட்டில் முகாமில் உள்ள மற்றும் வெளியே வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு கரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மளிகைப் பொருட்கள் வழங்குவது முதல்வரின் பரிசீலனையில் உள்ளது.
இலங்கைத் தமிழர் முகாம்களில் வீடுகள் இட நெருக்கடியாக இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டதை அடுத்து, அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டும் திட்டத்தைச் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முதல் முறையாகத் திருச்சி மாவட்டத்தில் செயல்படுத்தும் வகையில் கருத்துரு அனுப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுசென்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
இலங்கைத் தமிழர்களுக்குப் பாதுகாப்பான அரசாக திமுக அரசு விளங்கும். அந்த வகையில், முகாம்வாசிகளின் விருப்பமின்றி அவர்களை இலங்கைக்கு அனுப்பும் நடவடிக்கை எடுக்கப்படாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். குடியுரிமை உட்பட அனைத்துக் கோரிக்கைகளும் முதல்வர் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும். அவர் உங்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருவார்''.
இவ்வாறு அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தெரிவித்தார்.
கொட்டப்பட்டு முகாமில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் கூறும்போது, ''திருச்சி மத்திய சிறை வளாகத்தின் சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர். அவர்கள் சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளதன் உண்மை நிலை குறித்து காவல்துறை மூலம் ஆய்வு செய்து, அறிக்கை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு விரைவில் நல்ல முடிவு வரும். இலங்கைத் தமிழர் விவகாரத்தில் முதல்வர் தனி கவனம் செலுத்தி வருகிறார்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT