Published : 29 Jun 2021 04:50 PM
Last Updated : 29 Jun 2021 04:50 PM
மக்கள் உயிரோடு மத்திய அரசு விளையாடுவதாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (ஜூன் 29) வெளியிட்ட அறிக்கை:
"கரோனா நோய்த் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மூன்றாம் அலைப் பரவல் விரைவில் தாக்கும் என, மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். உருமாறிய கரோனா, டெல்டா பிளஸ் கரும்பூஞ்சை போன்ற புதிய நோய்களும் உருவாகி அச்சுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், தடுப்பூசி போட்டுக் கொள்வது மட்டுமே மக்கள் உயிர் காக்கும் ஒரே வழியாகக் கூறப்படுகிறது. தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசி மருந்துகளை வழங்குவதில் மத்திய பாஜக அரசு ஆரம்பத்தில் இருந்தே பாரபட்சம் காட்டி வருகிறது.
அரசியல் உறுதியற்ற மத்திய அரசின் வஞ்சனைப் போக்குக்கு முந்தைய தமிழக அரசு துணை போனது. இதனால் படுமோசமான அவலநிலைக்குத் தமிழகம் தள்ளப்பட்டது. இந்த நெருக்கடி சூழ்ந்த நிலையில், திமுக தலைமையில் அமைந்த புதிய அரசு போர்க்கால நடவடிக்கைகளை எடுத்து நோய்த் தொற்றுப் பரவலை வெகுவாகக் கட்டுப்படுத்தியுள்ளது.
முதல்வர் நோய்த் தடுப்பு உடையணிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தைரியம் கூறி மருத்துவப் பணிகளை வேகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி தடுப்பூசி போடுவதை மக்கள் இயக்கமாக்கி வருகிறது.
இதற்கு உதவ வேண்டிய மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தடுப்பூசி மருந்துகளைக் காலத்தில் வழங்காததால் தடுப்பூசி போடும் பணி தடைப்பட்டுள்ளது. தமிழக முதல்வர், கடிதங்கள் மூலமும், பிரதமரை நேரில் சந்தித்தும் வலியுறுத்திய பின்னரும், மத்திய அரசு பாரபட்ச அணுகுமுறையை மாற்றிக் கொள்ளாமல் தமிழக மக்கள் உயிரோடு விளையாடுவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
மேலும், முதல்வர் கேட்டுள்ளபடி உற்பத்தியாகும் தடுப்பு மருந்துகளில் 90 சதவீதத் தடுப்பூசி மருந்துகளைக் கொள்முதல் செய்து, தமிழகத்தின் மக்கள்தொகைக்கு ஏற்ப தடுப்பூசி மருந்துகளைத் தட்டுப்பாடு இல்லாமல் தொடர்ந்து வழங்க வேண்டும் என, மத்திய பாஜக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது".
இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT