Published : 29 Jun 2021 04:45 PM
Last Updated : 29 Jun 2021 04:45 PM
எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அதிமுக செய்ததைப் போன்ற ஜனநாயகக் கொடுமைகளை திமுக செய்யாது என, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் செய்தியாளர்களிடம் இன்று (ஜூன் 29) அவர் கூறியதாவது:
"முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சொகுசு வசதியுடன் சைதாப்பேட்டை சிறையில் தங்கி இருப்பதாகக் கூறுவது தவறானது. அவர், சில நாட்களுக்கு முன்பே புழல் சிறைக்கு மாற்றப்பட்டுவிட்டார்.
சிறையில் சட்டப்படி யாருக்கு, என்னென்ன சலுகைகள் இருக்கிறதோ, அதைத்தான் வழங்க முடியும். விதிகளுக்குப் புறம்பாக யாருக்கும், எந்த சலுகையும் வழங்கப்பட மாட்டாது.
அதிமுக ஆட்சியில் அக்கட்சியினர் எந்த திட்டத்திலும் தலையிடாததைப் போன்றும், தற்போது அனைத்து திட்டங்களிலும் திமுகவின் தலையீடு இருப்பதைப் போன்றும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எம்எல்ஏ கூறுவது தவறானது.
விராலிமலை அருகே சித்துப்பட்டியில் ஏற்கெனவே ஒன்றியக் குழுத் தலைவரால் திறந்து வைக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை விஜயபாஸ்கர் 2 தினங்களுக்கு முன்பு மீண்டும் திறந்து வைத்துள்ளார்.
இதே, அதிமுக ஆட்சியில் திமுக எம்எல்ஏக்கள் நெல் கொள்முதல் நிலையத்தைத் திறப்பதாக இருந்தால், வீட்டை விட்டு வெளியே வர விடமாட்டார்கள்.
அதிமுக ஆட்சியில் அரசு விழாவுக்கு திமுக எம்எல்ஏக்களை அழைப்பார்கள். ஆனால், எதையும் பேசக்கூடாது என்பார்கள். அதையும் ஒப்புக்கொண்டு விழாவுக்குப் புறப்பட்டால் இடையில் கைது செய்துவிடுவார்கள்.
நான் வெற்றி பெற்ற திருமயம் தொகுதியில் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சிக்கு மேடைக்குச் சென்ற என்னைக் கீழே பிடித்துத் தள்ளிவிட்டு என் மீதே வழக்குப் பதிவு செய்ததும் அன்றைய அதிமுக அரசுதான்.
இதுபோன்று, அதிமுக ஆட்சியில் எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு செய்த ஜனநாயகக் கொடுமைகளை திமுக ஆட்சியில் செய்யமாட்டோம். எனினும், இதை வரம்பு மீறிய சாதகமாக எடுத்துக்கொள்ள விஜயபாஸ்கர் முயற்சி செய்கிறார்".
இவ்வாறு அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT