Published : 29 Jun 2021 01:32 PM
Last Updated : 29 Jun 2021 01:32 PM
தமிழகத்தின் தடுப்பூசி தேவைக்காக யாருக்கும் பாதகமில்லாத அருமையான, நடைமுறைக்கு உகந்த நல்ல யோசனைகளை முதல்வர் ஸ்டாலினின் கடிதம் வெளிப்படுத்தி உள்ளது. இந்த யோசனைகளைக் காலம் தாழ்த்தாமல் செயல்படுத்த வேண்டும் என தி.க.தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று வெளியிட்ட அறிக்கை:
“டெல்டா பிளஸை எதிர்ப்பதற்கு வழி, தடுப்பூசி போட்டுக் கொள்வதில் முதல் டோஸ் மட்டும் போட்டால் அது 33 சதவிகித நோய் எதிர்ப்பு சக்தியைத்தான் தரும் வாய்ப்பு உண்டு; இரண்டாம் டோஸும் போட்டு முடித்தவர்கள் என்றால், அது 90 சதவிகித நோய் எதிர்ப்பு சக்தியின் பலனைத் தரும் என்றும் மருத்துவ வல்லுநர்களும், ஆய்வாளர்களும் தெளிவுபடுத்துகிறார்கள்.
தமிழ்நாட்டில் தடுப்பூசிகளை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் உள்பட பலரும் போட்டுக்கொள்வதில் ஒரு மாபெரும் பிரச்சார இயக்கம்போல் திமுக அரசு, முதல்வர் தலைமையில் செய்து, தயக்கமின்றி அனைத்துத் தரப்பு மக்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தாங்களாகவே முன்வந்து அரசு மருத்துவமனைகள் முன் திரளுகிறார்கள்.
இப்படி விருப்பமும், தேவையும் அதிகமாக இருக்கும் அளவுக்கு, மத்திய அரசு அளிக்கும் தடுப்பூசி விநியோகம் அதற்கு ஈடுகட்டக் கூடியதாக இல்லாததால், மக்கள் பெரிதும் ஏமாற்றமே அடையும் வேதனையான நிலைமை இருக்கிறது.
மத்திய அரசின் அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
இதனை மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு எழுதிய கடிதத்தில் நேற்று (28.6.2021) தமிழக முதல்வர் ஸ்டாலின் தேவைக்கேற்ப தடுப்பூசிகள் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யுமாறு வற்புறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தடுப்பூசிக் கொள்கையில் மாற்றம் செய்து, தனியார் மருத்துவமனைகளுக்கு 25% என்பதை 10% என்று மாற்றி அமைக்கவேண்டும். மாநில அரசுகளுக்கு இதுவரை ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்த தடுப்பூசிகளை, ஆயிரம் மக்களுக்கான விகிதத்தின் அடிப்படையில் மதிப்பீடு செய்து, தேவைப்படும் ஈடு செய்யும் ஒதுக்கீடுகளை குறைவாக ஒதுக்கப்பட்ட மாநிலங்களுக்கு அதிகமாகச் செய்யவேண்டும்.
அரசு மருத்துவமனைகளுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் இடையிலான ஒதுக்கீட்டை தற்போதுள்ள 75:25 என்ற விகிதத்திற்கு மாறாக, 90:10 என்ற சதவிகிதமாக மாற்றி அமைக்கவேண்டும்.
இவை யாருக்கும் பாதகமில்லாத அருமையான, நடைமுறைக்கு உகந்த நல்ல யோசனைகளாகும். முதல்வர் ஸ்டாலினின் இந்த யோசனைகளைக் காலம் தாழ்த்தாமல் செயல்படுத்த வேண்டும்.
கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களை ஐரோப்பிய யூனியன் நாடுகள் அங்கீகரிக்காதாம்
அடுத்து கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டால், ஐரோப்பிய யூனியன் நாடுகள் அங்கீகரிக்காது. வெளிநாட்டுப் பயணங்களில் அனுமதி மறுக்கும் நிலைமை ஏற்பட்டிருப்பதையும் அவசரமாக கவனித்து, மத்திய அரசின் வெளியுறவுத் துறை இந்தத் தடையைப் போக்க முன்வரவேண்டும்.
அம்மருந்து ஊசிகள் ஐரோப்பா மருத்துவ முகமையின் அங்கீகாரத்தை விரைந்து பெறவேண்டியது மிகவும் முக்கியமான அவசரத் தேவைகளில் ஒன்று. இது நாட்டின் வளர்ச்சி, வணிகத் துறை, மற்ற பல துறைகளின் வளர்ச்சியையும் பாதிக்கும் என்பதால், விரைந்து செய்ய வேண்டும்”.
இவ்வாறு கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT