Published : 29 Jun 2021 01:26 PM
Last Updated : 29 Jun 2021 01:26 PM
நீட் தேர்வு ரத்து குறித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது திமுக அரசின் கடமை என, பாமக இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அன்புமணி இன்று (ஜூன் 29) வெளியிட்ட அறிக்கை:
"தமிழகத்தில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிராக பாஜகவின் நிர்வாகி ஒருவர் தொடர்ந்துள்ள வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகள், நீட் தேர்வுக்கு எதிரான முயற்சிகள் வெற்றி பெறாதோ? என்ற ஐயத்தை மாணவர்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளன. மாணவர்களின் அச்சத்தைப் போக்க வேண்டியது, நீட் தேர்வை நீக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுகவின் கடமை ஆகும்.
நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வு, 'உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இது தொடர்பான தீர்ப்பை பாதிக்கும் வகையில் எந்த மாநிலங்களும் முடிவெடுக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்த நிலையில், நீட் தேர்வை பாதிக்கும் வகையில் தமிழக அரசு குழுவை அமைத்துள்ளதே? இதற்கு உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா?' எனக் கேள்வி எழுப்பியது.
நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுக்கு உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்படாத நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் அதன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தால், ஏ.கே.ராஜன் குழு அமைக்கப்பட்டது செல்லாது என்று தீர்ப்பளிக்கக்கூடும். அது நீட் தேர்வை ரத்து செய்வதற்காகத் தமிழக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்தும்.
அத்தகைய சூழல் ஏற்பட்டால், தமிழகத்தில் நீட் தேர்வு தொடர்ந்து நடத்தப்படுமோ? ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவு நிரந்தரமாகக் கருகிவிடுமோ? என்ற மாணவர்களின் ஐயமும், அச்சமும் நியாயமானவைதான். அந்த அச்சத்தைப் போக்கவும், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறவும், அடுத்தடுத்து என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன? என்பதைத் தமிழக அரசு விளக்க வேண்டும். மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க இது அவசியமாகும்.
காங்கிரஸும், திமுகவும் ஆயிரமாயிரம் முறை மறுத்தாலும் இந்தியாவில் நீட் திணிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசுதான் காரணம் ஆகும். நீட் தேர்வு செல்லாது என்று 2013ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், அத்தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ததும் காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசுதான்.
அப்போது தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவின் அடிப்படையில்தான் நீட் தேர்வு செல்லாது என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. நீட் தேர்வு சட்ட அங்கீகாரம் பெற்றதற்கு இந்தத் தீர்ப்புதான் காரணமாகும். அந்த வகையில் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற்றுத் தரவேண்டிய கடமையும், பொறுப்பும் திமுக அரசுக்கு இருக்கிறது.
ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்புகளைப் பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் பாமகவின் நிலைப்பாடு ஆகும். அதற்காக சென்னையில் உண்ணாநிலை உள்ளிட்ட போராட்டங்களை எனது தலைமையில் பாமக நடத்தியிருக்கிறது.
நீட் தேர்வை ரத்து செய்வதற்கான கடந்த ஆட்சியின் முயற்சிகளுக்கு பாமக ஆதரவு அளித்தது. நீட் தேர்வுக்கு எதிரான இப்போதைய அரசின் நடவடிக்கைகளுக்கும் பாமக முழு ஆதரவை அளித்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக, நீட் தேர்வை ரத்து செய்வதற்கான காரண காரியங்களை விளக்கி நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிடம் விரிவான மனுவைத் தாக்கல் செய்துள்ளேன்.
தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆட்சிக்கு வந்துவிட்ட நிலையில், நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழக சட்டப்பேரவையில் சட்டம் இயற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற திமுக அரசு திட்டமிட்டுள்ளது. இது முந்தைய ஆட்சியில் முயற்சி செய்யப்பட்டு வெற்றி பெறாத திட்டம்தான்.
கடந்த முறை எந்த புள்ளிவிவரமும் இல்லாமல் சட்டம் இயற்றப்பட்ட நிலையில், இந்த முறை புள்ளிவிவரங்களைத் திரட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கும் இப்போது ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில், நீட் சவாலை அரசு எவ்வாறு முறியடிக்கும் என்பதே கேள்வி?
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவது எளிதானது அல்ல என்பதை திமுகவும் நன்கு அறியும். ஆனாலும், நீட் தேர்வைக் கொண்டு வருவதற்குக் காரணமாக இருந்த திமுகவே, அத்தேர்வை ரத்து செய்வதாகக் கூறி ஆட்சிக்கு வந்தது. அதனால், எப்பாடுபட்டாவது நீட் தேர்விலிருந்து விலக்கு பெற வேண்டியதும், அதன் மூலமாக மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியதும் திமுக அரசின் கடமையாகும்".
இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT