Published : 29 Jun 2021 01:11 PM
Last Updated : 29 Jun 2021 01:11 PM
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தைத் திருத்தியமைத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நலவாரியத் தலைவராக பொன்.குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஜூன் 29) வெளியிட்ட அறிவிப்பு:
"தொழிலாளர்களின் நலன்களைப் பேணிக் காப்பதில், இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. அமைப்புசாராத் தொழிலாளர்களுக்குச் சமூகப் பாதுகாப்பு வழங்கும் வகையில், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர் (வேலை மற்றும் பணி நிலைமைகள் முறைப்படுத்துதல்) சட்டம், 1982ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.
இச்சட்டத்தின்கீழ், 1994ஆம் ஆண்டு தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் அமைக்கப்பட்டது. கடந்த ஐந்தாண்டுகளாகத் திருத்தியமைக்கப்படாத தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருத்தியமைத்து ஆணையிட்டுள்ளார்.
கட்டுமானத் தொழிலாளர்களின் கட்டணச் சுமையை நீக்கும் வகையில், பதிவு மற்றும் புதுப்பித்தலுக்காக வசூலிக்கப்பட்ட கட்டணங்கள் 1.9.2006 முதல் அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதியால் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு, அனைத்துத் தொழிலாளர்களும் அரசின் நலத்திட்டங்களைப் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டது.
கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்புசாராத் தொழிலாளர்களும், அந்தந்த மாவட்ட அலுவலகங்களை எளிதில் தொடர்புகொண்டு, நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஏதுவாக, அனைத்து மாவட்டங்களிலும் 1.11.2008 முதல் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) அலுவலகங்கள், அப்போதைய முதல்வர் கருணாநிதியால் உருவாக்கப்பட்டன.
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில், தற்போது 13,41,494 தொழிலாளர்கள் பதிவுசெய்து பயன்பெற்று வருகின்றனர். இவ்வாரியத்தின் அலுவல் சார்பற்ற உறுப்பினர்களின் பதவிக் காலம் 18.2.2016-ல் முடிவடைந்த நிலையிலும், கடந்த 5 ஆண்டுகளாக இவ்வாரியம் திருத்தியமைக்கப்படவில்லை.
கருணாநிதி வழியில் செயல்படும் இந்த அரசு, பதவியேற்ற குறுகிய காலத்திற்குள் கட்டுமானத் தொழிலாளர்களின் நலனைப் பேணுவதற்காக, அனைத்துத் தரப்பு வேலை அளிப்போர் மற்றும் தொழிலாளர் பிரதிநிதிகளைக் கொண்டு, கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தைத் திருத்தியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவ்வாறே பின்வருமாறு திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
திருத்தியமைக்கப்பட்ட தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தின் தலைவராக பொன்.குமாருடன், அரசுப் பிரதிநிதிகளாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், நிதி, பொதுப்பணி ஆகிய துறைகளின் கூடுதல் தலைமைச் செயலாளர்கள், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைகளின் முதன்மைச் செயலாளர்கள், தொழிலாளர் ஆணையர், இயக்குநர், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் மற்றும் மத்திய அரசின் மண்டலத் தொழிலாளர் ஆணையரும்; வேலையளிப்போரின் பிரதிநிதிகளாக (Representatives of Employers), தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறைகளின் முதன்மைப் பொறியாளர்களும், இயக்குநர், நகராட்சி நிர்வாகத் துறை உள்ளிட்டோர் அங்கம் வகிப்பர்.
மேலும், பதம் துகார், CREDAI, சென்னை அமைப்பின் தலைவர், சிவகுமார், மாநிலத் தலைவர், இந்திய கட்டிட வல்லுநர் சங்கம், எல். சாந்தகுமார், தலைவர், அகில இந்திய கட்டுமான வல்லுநர் சங்கத்தின் தென் பிராந்தியத் தலைவர், ஷாஜகான் சேட், எம்.கே.எம்.எஸ். கட்டுமான நிறுவனத்தின் நிர்வாகப் பங்குதாரர் ஆகியோரும்; உடலுழைப்புத் தொழிலாளர்களின் பிரதிநிதிகளாக (Representatives of Manual Workers) தருமபுரி, நாமக்கல், கடலூர் மாவட்டங்களில் உள்ள தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், அகில இந்திய காங்கிரஸ் தொழிற்சங்க நிறுவனத்தின் (AITUC) துணைப் பொதுச்செயலாளர், இந்திய தொழிற்சங்கங்களின் மையத்தின் செயற்குழு உறுப்பினர், மறுமலர்ச்சித் தொழிலாளர் முன்னணியின் மாநிலச் செயலாளர், அகில இந்திய அமைப்புசாராத் தொழிலாளர் காங்கிரசின் மாநில தலைவர், இந்திய தேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் சங்கத்தின் உறுப்பினர், தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநிலப் பேரவை அமைப்பாளர் உள்ளிட்டோர் அங்கம் வகிப்பர்".
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT