Published : 29 Jun 2021 12:53 PM
Last Updated : 29 Jun 2021 12:53 PM

ஆன்லைன் வகுப்பில் கட்டண பாக்கியைச் செலுத்த பெற்றோரை வற்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி வழக்கு: அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்வதற்காகக் கடந்த ஆண்டு கட்டண பாக்கியைச் செலுத்தும்படி பெற்றோரை வற்புறுத்தக் கூடாது எனத் தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தும்படி கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், “கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் கல்விக் கட்டணத்தைச் செலுத்தும்படி, பெற்றோரை நிர்பந்திக்கக் கூடாது. கட்டணம் செலுத்தாத மாணவர்களின் கல்வியில் இடையூறு ஏற்படுத்தக் கூடாது எனத் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தும், தனியார் பள்ளிகள், தொடர்ந்து இச்செயல்களில் ஈடுபடுகின்றன. அவற்றின் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நடப்பு 2021-22ஆம் கல்வியாண்டுக்கான ஆன்லைன் வகுப்பில் மாணவர்கள் கலந்துகொள்ள, கடந்த ஆண்டு கட்டண பாக்கியைச் செலுத்தும்படி பெற்றோரை வற்புறுத்தக் கூடாது எனத் தனியார் பள்ளிகளுக்கு அரசு உத்தரவிட வேண்டும்.

கட்டண பாக்கியைச் செலுத்தும்படி நிர்பந்திக்காமல், மாணவர்களை அடுத்த வகுப்புக்கு முன்னேற்றுவது மட்டுமல்லாமல், அவர்களுக்கு 2021-22ஆம் கல்வியாண்டுக்கான புத்தகங்களை வழங்கி, ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள அனுமதிக்க உத்தரவிட வேண்டும். பொருளாதார ரீதியில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ளத் தேவையான உபகரணங்களையும், இணையதள வசதியையும் கரோனா நிவாரண உதவியாக வழங்க வேண்டும்.

மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாமை மாதந்தோறும் நடத்த உத்தரவிட வேண்டும். கட்டண பாக்கியைத் தள்ளுபடி செய்து, ஆன்லைன் வகுப்புகளைத் திறமையான முறையில் நடத்த மாற்று நடைமுறைகளைக் கண்டறிய கல்வித்துறை நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைப்பதுடன், குறைந்தபட்சக் கட்டணத்தை நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மனுவுக்கு அடுத்த வாரத்துக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x