Published : 29 Jun 2021 12:30 PM
Last Updated : 29 Jun 2021 12:30 PM

நீட் தேர்வு பாதிப்பு குறித்தே ஆராயக் கூடாது என்கிற பாஜகவின் வன்மம்; சட்டப்படி சந்திப்போம்: மா.சுப்பிரமணியன் பேட்டி 

சென்னை

நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை, நீட் தேர்வு பாதிப்பு குறித்தே ஆராயக் கூடாது என்கிற பாஜகவின் நீதிமன்ற வழக்கு, வன்மம் குறித்தெல்லாம் நீதிமன்றம் மூலமாகவே தீர்வு வரும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள ஏ.கே.ராஜன் கமிட்டியை எதிர்த்து பாஜக தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் எழுப்பிய கேள்விகள் குறித்தும், அரசு எடுக்கப்போகும் நடவடிக்கை குறித்தும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னையில் பேட்டி அளித்தார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகக் குழு அமைக்க முடியாது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதே?

அடுத்த விசாரணைக்கு வழக்கு வரும். அந்த நேரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழக மாணவர்களின் நலன், மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து கருத்தைக் கேட்கத்தான் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்களின் கருத்துகள்தான் கேட்கப்பட்டு வருகின்றன. பாதிப்பு குறித்து ஆராயத்தான் இந்தக் குழு. இதற்கு மேலமை நீதிமன்றங்கள் அனுமதி வேண்டுமா என்பது குறித்து உரிய வழிமுறைகளை ஆராய்ந்து அடுத்த விசாரணையில் பதிலளிக்கப்படும்.

இந்தக் குழு அமைத்ததே தவறு என்கிறார்களே?

இப்போது வழங்கப்பட்டது தீர்ப்பு அல்ல. அடுத்த தேதியை ஒத்திவைத்துள்ளார்கள். அரசின் பதிலைக் கேட்டுள்ளார்கள். அதுகுறித்து தமிழக அரசின் கருத்துகள், சட்டரீதியான காரணங்கள், சட்ட வழிமுறைகள், காரணங்களைத் தொகுத்துச் சட்ட நிபுணர்கள் வழிமுறைகளை ஆராய்ந்து உரிய பதிலளிப்பார்கள்.

நீட் கொண்டுவர சாத்தியமில்லை என்பதற்காகத்தான் 7.5% கொண்டுவரப்பட்டது, நீட் சாத்தியமில்லை என்றால் அந்த மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் அல்லவா?

முதலில் இந்த 7.5% கொண்டுவரக் காரணமாக இருந்ததே திமுகதான். இதைச் சட்டப்பேரவையில் கொண்டுவந்தபோது ஆதரித்தோம். 7.5% அல்ல 10% கேட்டோம். அது பின்னர் ஆளுநருக்கு அனுப்பப்பட்டு 45 நாட்களுக்கு மேலாகியும் தாமதப்படுத்தப்பட்டதைத் தற்போதைய முதல்வர் எதிர்த்துப் போராட்டம் நடத்தியபின் அது கொண்டுவரப்பட்டது. ஆனாலும், கூட நீட் தேர்வு பாதிப்பு அதையும் தாண்டி பெரிதாக உள்ளது, 7.5% மாணவர்களைத் தாண்டி பெரும்பாலான மாணவர்களுக்கும் பயன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆராயக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

7.5% தாண்டி 10% வந்தால் கூடுதல் மாணவர்கள் பயன்பெறுவார்கள். அதைக் கொண்டுவராமல் குழு அமைப்பது ஏன்?

நீட் தேர்வில் உள்ள பாதிப்புகளைத்தான் 86,342 பேரில் பெரும்பாலானவர்கள் கூறியுள்ளனர். அதனால் இனிமேல் நீட் தேர்வினால் நானோ நீங்களோ பயன்பெறுவதைத் தாண்டி அடுத்துவரும் சந்ததியினர் முழுமையாகப் பயன்படுத்தட்டுமே. அதில் அனைவருக்கும் அந்தப் பயன் வரட்டுமே.

கல்வி முறையில் உள்ள வித்தியாசங்கள், பயிற்சிக்குப் போகவேண்டுமானால் கூடுதல் பணச்சுமை, ஒவ்வொரு ஏழை மாணவரும் பயன்பெற முடியாத நிலை உள்ளது. இந்தப் பயிற்சி நடத்தும் நிறுவனங்கள்தான் பயனடையும் நிலை உள்ளது. ஏற்கெனவே படித்த முடித்தபின் அனைத்துப் பயிற்சிகளும் முழுமை பெற்றபின் மீண்டும் ஒரு பயிற்சி அது மன உளைச்சல் இதுமாதிரி சூழ்நிலையில்தான் ஆராய்வதற்கு இந்தக் குழு போடப்பட்டுள்ளது.

நுழைவுத் தேர்வு என்கிற கருத்தையே திமுக முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை, மறைந்த தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தக் காலகட்டத்தில் அதற்கு முன் இருந்த நுழைவுத் தேர்வை எதிர்த்துக் குழு அமைத்து நீதிமன்றம் சென்று ரத்து செய்தார். ஆகவே, அனைத்துக் காலங்களிலும் திமுக நுழைவுத் தேர்வை எதிர்த்தே வந்துள்ளது. நுழைவுத் தேர்வு மட்டுமல்ல, எக்சிட் தேர்வுகளையும் நாங்கள் எதிர்க்கிறோம்.

செப்டம்பரில் நீட் தேர்வு நடத்தப்படுமா? அதன் பின்னர் நடவடிக்கை தொடருமா?

நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து அறிக்கை, ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு அறிக்கை, அந்தக் குழு பரிந்துரைக்குப் பின் முதல்வர் எடுக்கும் தொடர்ச்சியான நடவடிக்கை, சட்டப்பேரவை நடவடிக்கை, மத்திய அரசுக்குக் கொடுக்கும் அழுத்தம் என நடவடிக்கை தொடரும்.

நீங்கள் அமைத்துள்ள குழுவுக்கு அதிகாரம் உண்டா? அது நீட் தேர்வை ரத்து செய்யவைக்க முடியுமா?

நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை, நீட் தேர்வு பாதிப்பு குறித்தே ஆராயக் கூடாது என்கிற பாஜகவின் நீதிமன்ற வழக்கு, வன்மம் குறித்தெல்லாம் நீதிமன்றம் மூலமாகவே தீர்வு வரும்.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x