Published : 29 Jun 2021 11:52 AM
Last Updated : 29 Jun 2021 11:52 AM

நீட் தேர்வு; ஏ.கே.ராஜன் குழுவுக்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கில் அரசியல் உள்நோக்கம் இல்லை: பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் பேட்டி

கரு.நாகராஜன்: கோப்புப்படம்

சென்னை

ஏ.கே.ராஜன் குழுவுக்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என, தமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு, ஜூன் 10-ம் தேதி அரசாணை பிறப்பித்தது.

நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால், மாற்று வழி குறித்தும், அதை அமல்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என, அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த அரசாணைக்குத் தடை விதிக்கக் கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும், தமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று (ஜூன் 29) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜராகி, நீட் தேர்வு நடைமுறையைப் புறந்தள்ளும் வகையில், தமிழக அரசு குழு அமைத்திருப்பதாகக் குற்றம் சாட்டினார்.

தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, தேர்தல் அறிக்கையில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், கொள்கை முடிவு எடுக்கப்பட்டு குழு அமைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

ஆனால், நீதிபதிகள் குறுக்கிட்டு, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என அரசுக்கு அறிவுறுத்தினர். மேலும், குழு அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா எனவும் கேள்வி எழுப்பினர். அரசிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்க அவகாசம் வேண்டுமென அரசு தலைமை வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து, வழக்கு குறித்து மத்திய அரசும், தமிழக அரசும் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 5-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

வழக்கு தொடர்பாக, மனுதாரரான பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், வழக்கறிஞர் அணி தலைவர் ஆர்.சி.பால் கனகராஜ் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்ற எம்பிஏ நுழைவுவாயிலில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது, கரு.நாகராஜன் கூறுகையில், "நீட் தேர்வு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தெளிவாக உள்ளது. நீட் தொடர்பாக தெளிவாக ஆராயப்பட்டு, இதனால் யாருக்கும் பாதிப்பில்லை, சமூக நீதி பாதுகாக்கப்படும் என்ற அடிப்படையில், ஆராய்ந்து தெளிவாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது, இதனை அவரும் எதிர்க்கவில்லை. தூக்கத்திலிருந்து எழுப்பிக் கேட்டாலும் நீட் வேண்டாம் எனச் சொல்லும் ரவீந்திரநாத் கூட இக்குழுவில் உள்ளார். ஆனால், அவரும் எதிர்க்கவில்லை.

இந்த நிலையில், இந்தக் குழு நடத்திய கருத்துக் கேட்பில் 85 ஆயிரம் மனுக்கள் வந்துள்ளதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஒரு கணிணியில் இருந்தே எத்தனை பேர் வேண்டுமானலும் கருத்து தெரிவிக்கலாம். ஒருவரே கூட பல முறை கருத்து தெரிவிக்கலாம். இது திமுகவின் குழுவா? தமிழக அரசின் குழுவா?

வாக்குறுதி கொடுத்துவிட்டோம் என ஒப்புக்கு நடிக்க இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வினால்தான் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏழை, எளிய மாணவர்களின் கனவை நனவாக்கும் தேர்வு இதுதான்

இந்த வழக்கில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை. ஏழு நீதிபதிகள் ஆய்வு செய்யாமலா தீர்ப்பு வழங்கினார்கள்? இது மக்களையும், மாணவர்களையும் ஏமாற்றும் செயல்" என கரு.நாகராஜன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x