Published : 29 Jun 2021 09:53 AM
Last Updated : 29 Jun 2021 09:53 AM
கரோனா பாதிப்பு குறைந்ததாக கூறி, சுகாதரத்துறை, நெருக்கடியான காலக்கட்டத்தில் கரோனா மருத்துவமனையில் பணிபுரிந்த ஒப்பந்த செவிலியர்களை 30 நாட்களில் பணியில் இருந்து திரும்பி அனுப்பியதாக, பாதிக்கப்பட்ட செவிலியர்கள் 25 பேர் நேற்று மாலை ஆட்சியரை சந்தித்து கண்ணீர் மல்க முறையிட்டனர்.
மதுரை மாவட்டத்தில் இரண்டாம் கரோனா அலை உச்சமாக இருந்த கடந்த ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை, தினமும் 1,500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். ஏராளமானோர் உயிரிழந்தனர்.
மதுரையிலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கரோனா சிகிச்சைக்கு போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் போதிய அளவு இல்லாத நிலையில், சுகாதாரத்துறை மூலம் தற்காலிமாக 3 மாத ஒப்பந்தகால அடிப்படையில் கடந்த மே மாதம் மருத்துவர்கள், செவிலியர்கள், லேப் டெக்னீசியன்கள் நேர்முக தேர்வு நடத்தப்பட்டு, 300-க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டு பணிநியமனம் செய்யப்பட்டனர்.
இவர்கள் அரசு ராஜாஜி கரோனா சிறப்பு மருத்துவமனை, தோப்பூர் அரசு கரோனா மருத்துவமனை உள்ளிட்ட அரசு கரோனா மருத்துவமனைகளில் பணிபுரிந்துவந்தனர்.
இந்நிலையில், தற்போது கரோனா பரவல் குறைவாக இருப்பதாக கூறி, மதுரை தோப்பூர் பகுதியில் உள்ள அரசு கரோனா மருத்துவமனையில் பணியில் இருந்த 25-க்கும் மேற்பட்ட ஒப்பந்த பெண் செவிலியர்களை 30 நாட்களிலேயே பணி நீட்டிப்பு இல்லை என கூறி, திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.
அதிருப்தியடைந்த செவிலியர்கள், நேற்று மாலை (ஜூன் 28) மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்பந்த செவிலியர்கள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.
தற்போது மூன்றாம் கட்ட அலையான டெல்டா ப்ளஸ் கரோனா பாதிப்பால் மதுரையை சேர்ந்த இளைஞர் உயிரிழந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை மதுரையில் உள்ள மருத்துவமனைகளில் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்று ஒரு புறம் சுற்றறிக்கை அனுப்பியுள்ள நிலையில், மதுரையில் மற்றொரு புறம் கரோனா குறைந்ததாக காரணம் கூறி, ஒப்பந்த செவிலியர்களை பணியில் இருந்து விடுவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, பாதிக்கப்பட்ட செவிலியர்கள் கூறுகையில், "ஏற்கெனவே தனியார் மருத்துவமனைகளில் நல்ல ஊதியத்தில் பணியில் நாங்கள் பணிபுரிந்து வந்தோம். அரசு மாத ஒப்பந்தத்தில் பணி வழங்குவதாக கூறியதை நம்பி பணிபுரிந்த வேலையை விட்டு நெருக்கடியான நேரத்தில் கரோனா வார்டுகளில் பணிபுரிந்தோம்.
தற்போது தொற்று குறைந்ததால் எங்களை ஒப்பந்த காலம் நிறைவடைவதற்குள் கைவிடுவது எந்த வகையில் நியாயம். எனவே, அரசு பணி நீட்டிப்பு காலத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT