Published : 29 Jun 2021 06:12 AM
Last Updated : 29 Jun 2021 06:12 AM
மத்திய அரசு பெட்ரோல், டீசல்விலையை குறைக்க வேண்டும், கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஏழை-எளிய மக்களின் குடும்பத்துக்கு 6 மாதங்களுக்கு ரூ.7,500 வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்), விடுதலை சிறுத்தைகள் ஆகியவை சார்பில் ஜூன் 28, 29, 30 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது.
அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பல இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் ப.சுந்தரராஜன், மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி, மாவட்ட செயலாளர் கஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் நீல வானத்து நிலவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:
உலகளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து கொண்டே இருக்கிறது. 6 ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 110 டாலராக இருந்தது. அப்போது நம் நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.52-க்கு விற்றது. இப்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் 44 டாலராக உள்ளது. ஆனால் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-க்கு விற்கிறது. இதனால், நாள்தோறும் விஷம் போல் விலைவாசி ஏறுகிறது. பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மோடி அரசு 100 சதவீதம் வரி விதிக்கிறது.
மோடி அரசில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, உணவுப் பொருட்கள், உரம் ஆகியவற்றுக்கு மானியம் கிடையாது. இப்படி, ஏழை-எளிய மக்களுக்கு மானியம் அளிக்காத அரசு, 7 ஆண்டுகளில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வராக் கடனாக ஐந்தே கால் லட்சம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்துள்ளது என்றார்.
அதேபோல், செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் தேவ அருள் பிரகாசம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்) கட்சிகளின் நிர்வாகிகளான கிருஷ்ணா, பாலாஜி, நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.
கல்பாக்கம் அருகே புதுப்பட்டினம், திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என கோரிக்கை முழக்கமிட்டனர்.
மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகே சிஐடியு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மொட்டை அடித்து பிச்சைப் பாத்திரம் ஏந்தியும், இரு சக்கர வாகனத்துக்கு பாடை கட்டியும் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT