Published : 28 Jun 2021 07:59 PM
Last Updated : 28 Jun 2021 07:59 PM

வைகை ஆற்றின் சாலையில் ஆக்கிரமிப்பு: அகற்றத் தயக்கம் காட்டும் மாநகராட்சி

படங்கள்: ஆர்.அசோக்.

மதுரை

வைகை ஆற்றின் இரு புறமும் நான்கு வழிச்சாலை அமைக்கப்படும் நிலையில் சில இடங்களில் உள்ள ஆக்கிரமிப்பை மாநகராட்சி அகற்றாததால் ஆற்றின் இருபுறமும் தொடர்ச்சியாகச் சாலை அமைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலைத் துறையும், மாநகராட்சியும் இணைந்து வைகை ஆற்றின் இரு புறமும் ரூ.384 கோடியில் 50 அடி அகலத்திற்கு பிரம்மாண்ட நான்கு வழிச் சாலை அமைத்து வருகின்றன. இதில், குரு தியேட்டர் பாலம் முதல் ராஜா மில் சாலை வரையும், குருவிக்காரன் சாலை முதல் விரகனூர் வரையும் 9 கி.மீ. தொலைவிற்கு ரூ.300 கோடிக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை சாலை அமைக்கிறது.

நகர்ப் பகுதியில் அதற்கு இடைப்பட்ட ராஜா மில் பகுதியில் இருந்து குருவிக்காரன் சாலை வரை 3 கி.மீ. தொலைவிற்கு மாநகராட்சி ரூ.84 கோடியில் சாலை அமைக்கிறது. மாநகராட்சி நிர்வாகம் அமைக்கும் சாலையில் பூங்காக்கள், தடுப்புச் சுவர் அமைக்கப்படுகிறது. ஆற்றின் இரு கரைகளிலும் ஏற்கெனவே தனியார் பலர் ஆற்றங்கரைகளை ஆக்கிரமித்துக் கட்டிடங்களைக் கட்டிவிட்டனர்.

ஆட்சியாளர்களின் கவனக்குறைவால் தற்போது அவர்கள் அந்த ஆக்கிரமிப்பு நிலத்திற்கு நிரந்தர பட்டாவும் வாங்கிவிட்டனர். அதனால், ஒரு காலத்தில் மதுரை நகரில் பிரம்மாண்டமாக ஓடிய வைகை ஆறு, தற்போது பல இடங்களில் சுருங்கிவிட்டது. அதனால், வைகை ஆற்றின் இரு கரைகளிலும் திட்டமிடப்பட்ட சாலைகளைத் தொடர்ச்சியாகப் போட முடியாமல் மாநகராட்சி திணறிக் கொண்டிருக்கிறது.

இதுகுறித்து வைகை நதி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜன் கூறும்போது, ''தென்கரைச் சாலையில் ராஜா மில் சாலை பாலம், புட்டுத்தோப்பு, விளாங்குடி பாலம், வடகரையில் தத்தனேரி பாலம், செல்லூர் எல்ஐசி பாலம் உள்ளிட்ட சில இடங்களில் இணைப்புச் சாலை இல்லை. ஆழ்வார் புரம், ஒபுளா படித்துறை, வண்டியூர் பாலம், குருவிக்காரன் சாலை பாலம் ஆகிய இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இந்தச் சாலை முழுமை அடையாது. மதுரை நகருக்குள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, வாகனங்கள் நகருக்குள் வராமல் ஆற்றங்கரையோரமாக இந்தச் சாலைகளை அமைப்பதாக மாநகராட்சி கூறுகிறது.

ஆனால், ஆற்றங்கரையோரத்தில் போடப்படும் இந்தச் சாலையில் சில இடங்களில் இணைப்புச் சாலை இல்லாமல் உள்ளது. சாலை போட வேண்டுமென்றால் ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டி வரும். அதற்கு மாநகராட்சி நடவடிக்கை எடுக்கத் தயங்குவதால், எந்த நோக்கத்திற்காக இந்தச் சாலை போடுவதாகச் சொல்கிறார்களோ அது நிறைவேறாமல் வாகனங்கள் நகர்ப் பகுதிக்குள் மீண்டும் வந்துசெல்லும் நிலை ஏற்படும். அதனால், மீண்டும் போக்குவரத்து நகர்ப் பகுதியில் தொடரத்தான் வாய்ப்புள்ளது.

வைகை ஆறு மதுரை நகர்ப் பகுதியில் வரும்போதுதான் சுருங்கிவிட்டது. நகருக்கு வெளியே கிராமங்கள் வழியாகச் செல்லும் வைகை ஆறு, ஆக்கிரமிப்பு இல்லாமல் அதன் இயல்பான நிலையிலே உள்ளது. தற்போது ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அவசரக் கோலத்தில் சாலை அமைப்பதால் ஆற்றங்கரை சுருங்கிவிட்டதுதான் மிச்சம். அந்தச் சாலைகளால் மதுரை மக்களுக்கு எந்தப் பலனும் இல்லாத நிலை உள்ளது.

ஆற்றங்கரையோரத்தில் கடந்த சில ஆண்டுகளாகச் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வைத்த பல நூறு மரங்களைப் பொதுப் பணித்துறை அகற்றியது. ஆனால், ஆற்றுக்குள் இருக்கும் கருவேல மரங்களையும், தனியார் ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவதில்லை'' என்று தெரிவித்தார்.

மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ''வைகை ஆற்றுப் பாலங்கள் கட்டுமானப் பணி முடிந்ததும் விடுபட்ட இடங்களில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்தச் சாலைப் பணி நிறைவடையவில்லை'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x