Last Updated : 28 Jun, 2021 05:59 PM

2  

Published : 28 Jun 2021 05:59 PM
Last Updated : 28 Jun 2021 05:59 PM

புதிய இடத்தில் ரூ.220 கோடிக்கு புதுச்சேரி பேரவைக் கட்டிடமா?- தற்போதைய இடத்திலேயே விரிவுபடுத்தக்கோரி மக்களவைச் செயலருக்குக் கடிதம்

புதுச்சேரி

முழு அதிகாரம் இல்லாமல் அனைத்துக் கோப்புகளையும் ஆளுநர் ஒப்புதலோடு செயல்படுத்தும் சூழலில், புதிய இடத்தில் ரூ.220 கோடிக்குப் புதுச்சேரி பேரவைக் கட்டிடம் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும். தற்போதைய இடத்திலேயே சட்டப்பேரவையை விரிவுபடுத்த வேண்டும் எனக் கோரி மக்களவைச் செயலர், மத்திய உள்துறைக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

புதுச்சேரி ராஜீவ் காந்தி மனித உரிமைகள் அமைப்புத் தலைவர் ரகுபதி இன்று அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

"புதுச்சேரியில் தற்போது செயல்பட்டு வரும் சட்டப்பேரவைக்கு பதிலாக புதிய சட்டப்பேரவை வளாகத்தைத் தட்டாஞ்சாவடியில் கட்டுவதற்காக மத்திய அரசின் நாடாளுமன்ற நிதியில் இருந்து ரூ.220 கோடி ஒதுக்கித் தரவேண்டும் எனப் புதுச்சேரி பேரவைத் தலைவர் காணொலி மூலமாக நாடாளுமன்றத் தலைவருக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.

புதுச்சேரி மக்களின் நலன் கருதி இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஏனெனில் புதிதாக சட்டப்பேரவையைக் கட்டுவதற்கு நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ள இடம் 5 சாலைகள் சந்திக்கும் முக்கியச் சந்திப்புச் சாலையான ராஜீவ் காந்தி சதுக்கம் அருகே உள்ளது. இதன் அருகே அரசு மருத்துவக்கல்லூரி, ஜிப்மர் மருத்துவமனை, தொழிற்பேட்டை ஆகியவை அமைந்துள்ள நிலையிலும், இந்தச் சந்திப்பில் மேம்பாலம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையிலும், இங்கு சட்டப்பேரவை கட்ட நடவடிக்கை எடுத்தால் பாதுகாப்பானதாகவும், பொருத்தமானதாகவும் இருக்காது.

ஏற்கெனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்தச் சந்திப்பில் கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும், பிற மாநிலங்களை ஒப்பிடும்போது மிகச் சொற்ப அளவிலான 30 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்டு முழு அதிகாரம் இல்லாமல் அனைத்துக் கோப்புகளையும் துணைநிலை ஆளுநர் ஒப்புதலோடு செயல்படுத்த வேண்டிய சூழ்நிலையில் செயல்பட்டு வருவதுதான் இந்தச் சட்டப்பேரவை. இந்நிலையில் சட்டப்பேரவையை மட்டும் அங்கு கொண்டு செல்வதால் அரசுப் பணியாளர்களுக்குக் கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதோடு, அரசு வாகனங்களின் பயன்பாடும் அதிகமாகும் நிலை ஏற்படும்.

மேலும், தற்போதுள்ள சட்டப்பேரவை புராதனமான கட்டிடம் ஆகும். இந்த இடம் போதவில்லை எனில் சட்டமன்றத்தை ஒட்டி தெற்குப் புறம் முழுமையான செயல்பாடின்றி உள்ள முந்தைய மகப்பேறு மருத்துவமனையின் ஒரு பகுதியையும், வடக்குப் புறம் 48,987 சதுரடி பரப்பளவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சொற்ப வாடகையே செலுத்தாமல் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான இடத்தில் செயல்பட்டு வரும் சர்க்கிள் தி பாண்டிச்சேரியும் கையகப்படுத்தி இந்த இடத்திலேயே அந்த நிதியினைக் கொண்டு அனைத்து வசதிகளுடன் கூடிய வகையில் ஒருங்கிணைந்த புதிய சட்டமன்றம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இக்கடித நகலை ஆளுநர், முதல்வருக்கும் ரகுபதி தந்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x