Published : 28 Jun 2021 05:47 PM
Last Updated : 28 Jun 2021 05:47 PM

தடுப்பூசி தட்டுப்பாடு வருத்தமாக உள்ளது: நீதிபதிகள் முன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

சென்னை

தமிழகத்தில் தற்போது 2 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே உள்ளன. தடுப்பூசி இல்லை எனக் காலை முதல் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தடுப்பூசி இல்லை என்பது வருத்தமான ஒன்றுதான். இன்று மதியத்திற்கு மேல் தடுப்பூசி தட்டுப்பாடு நிலைதான் உள்ளது என நீதிபதிகள் முன்னிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.

தமிழ்நாடு பார் கவுன்சில் சார்பில் வழக்கறிஞர்கள் மற்றும் கிளார்க்குகள், அவர்களின் குடும்பத்தினர், நீதிமன்றப் பணியாளர்களுக்கான கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாமை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தொடங்கி வைத்தார்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாமில் நீதிபதிகள் என்.கிருபாகரன், எம்.எம்.சுந்தரேஷ், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், துணைத் தலைவர் கார்த்திகேயன், இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் பிரபாகரன், அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா, நீதிக் கரங்கள் அமைப்பின் நிர்வாகி பி.வில்சன், தமிழ்நாடு மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

“தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் தொடர் முகாம்கள் நடத்தி அனைவருக்கும் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேயிலைத் தோட்டப் பணியாளர்களுக்கும், பழங்குடியினருக்கும் நேரடியாகச் சென்று தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

10 நாட்களில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தேயிலைப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பணி நிறைவடையும். தமிழ்நாட்டில் அதிகம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்ட சட்டமன்றத் தொகுதியாக சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி உள்ளது. 90 ஆயிரம் பேர் அங்கு தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

தடுப்பூசி இல்லை என்கிற போர்டு ஆங்காங்கே தொங்கிக் கொண்டிருக்கும் நிலை, மிகவும் வருத்தமாக உள்ளது. கிராமப்புறம் மட்டுமல்ல மலைவாழ் மக்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வமாக உள்ளனர். ஆனால், தடுப்பூசி இல்லை என்பது வருத்தமான ஒரு நிகழ்வாக உள்ளது.

இதுவரை தமிழகத்திற்கு வந்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 1 கோடியே 44 லட்சத்து 39 ஆயிரத்து 940 ஆகும். நாம் இதுவரை செலுத்தியுள்ள தடுப்பூசிகள் 1 கோடியே 41 லட்சத்து 50 ஆயிரத்து 749. கையிருப்பு 2 லட்சத்து 7 ஆயிரத்து 345 ஆகும்.

இன்று காலை நிலவரப்படி தமிழகத்தில் சுமார் 2 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தடுப்பூசி இல்லை எனக் காலை முதல் செய்திகள் வந்து கொண்டுள்ளன. தடுப்பூசி இல்லை என்பது வருத்தமான ஒன்றுதான். இன்று மதியத்திற்கு மேல் தடுப்பூசி தட்டுப்பாடு நிலைதான்”.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x