Published : 28 Jun 2021 05:13 PM
Last Updated : 28 Jun 2021 05:13 PM

தமிழகத்துக்கு வேண்டிய தடுப்பூசிகளைத் தர மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும்: உதயநிதி வேண்டுகோள் 

சென்னை

வழக்கறிஞர்களுக்கான கரோனா தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைத்த சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் இயக்கம் சிறப்பாக நடப்பதாகத் தெரிவித்தார். தடுப்பூசிக்கு மாற்று ஏதும் இல்லை என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

9 கோடி தடுப்பூசி மருந்துகளைப் பெற்றுத் தர மத்திய அரசிடம் உயர் நீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாடு பார் கவுன்சில் சார்பில் வழக்கறிஞர்கள் மற்றும் கிளார்க்குகள், அவர்களின் குடும்பத்தினர், நீதிமன்றப் பணியாளர்களுக்கான கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாமை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நீதிபதிகள் என்.கிருபாகரன், எம்.எம்.சுந்தரேஷ், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், துணைத் தலைவர் கார்த்திகேயன், இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் பிரபாகரன், அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா, நீதிக் கரங்கள் அமைப்பின் நிர்வாகி பி.வில்சன், தமிழ்நாடு மருத்துவத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முகாமின் முதல் தடுப்பூசியை இரண்டாவது தவணையாக பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் செலுத்திக்கொண்டார். முகாமைத் தொடங்கிவைத்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பேசியபோது, “கரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசிக்கு மாற்று ஏதும் இல்லை. கரோனா மீண்டும் பரவாமல் இருக்க முகக்கவசம், கிருமி நாசினி, தனி மனித இடைவெளி நடைமுறைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தும் நடைமுறை சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது” எனப் பேசினார்.

நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “கரோனா பெருந்தொற்றைத் தடுக்க ஒரே வழி தடுப்பூசிதான். 11 கோடி மக்களுக்குத் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ள நிலையில், 1 கோடியே 41 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே தற்பொழுது வரை செலுத்தப்பட்டுள்ளதால், மீதமுள்ள 9 கோடி தடுப்பூசி மருந்துகளைப் பெற்றுத் தர உயர் நீதிமன்றம் சார்பில் மத்திய அரசிடம் அறிவுறுத்த வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

விழாவில் பேசிய நீதிபதி என்.கிருபாகரன், கரோனாவால் வருமானம் இழந்துள்ள இளம் வழக்கறிஞர்களுக்குத் தமிழக அரசு உதவ வேண்டும். இறந்துபோன வழக்கறிஞர்கள் குடும்பங்களுக்குப் பெரும் உதவி செய்ய வேண்டும் எனவும் அரசைக் கேட்டுக்கொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x