Published : 28 Jun 2021 04:43 PM
Last Updated : 28 Jun 2021 04:43 PM

புலிக்குப் பிறந்தது பூனையாகாது; கருணாநிதியின் வழியில் நீட் தேர்வை ஸ்டாலின் ரத்து செய்வார்: அமைச்சர் பொன்முடி பேட்டி

சென்னை

''புலிக்குப் பிறந்தது பூனையாகாது. கருணாநிதி வழியில் ஸ்டாலின் இன்று ராஜன் கமிட்டி ஒன்றை ஏற்படுத்தியுள்ளார். அவருடைய பரிந்துரையின் அடிப்படையில் சட்டம் இயற்றப்பட்டு அது நீதிமன்றம் சென்றாலும் செல்லுபடியாகி நீட் தேர்வு தமிழகத்தில் நுழையாமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுமோ அத்தனையையும் முதல்வர் எடுத்துக் கொண்டிருக்கிறார்'' என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னையில் முதல்வரிடம் ஆலோசனை நடத்தியபின் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டி வருமாறு:

“எம்.ஃபில். பட்டப்படிப்பு ரத்து செய்யப்பட்டதற்கும் புதிய கல்விக் கொள்கைக்கும் சம்பந்தமே இல்லை. இப்போது மட்டுமல்ல 2009ஆம் ஆண்டிலிருந்தே முரண்பட்ட கருத்து உள்ளது.

ஆசிரியர்கள், மாணவர்கள் இடையே இரண்டுவிதமான கருத்துகள் உள்ளன. ஓராண்டு படிப்பு என்பது இரண்டு வருடப் படிப்பாக மாறிவிட்டது. அதனால் பல கல்லூரிகளில் இப்படிப்பை நிறுத்தி விட்டார்கள். ஆகவே ஆசிரியர், மாணவர் கருத்தைக் கேட்டு முடிவெடுப்போம்.

அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைகழகம் இரண்டுக்கும் துணைவேந்தர் நியமனம் செய்யப்பட வேண்டியுள்ளது. துணைவேந்தர் நியமனம் குறித்து கமிட்டி போட்டுள்ளோம். அந்த கமிட்டியில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று எங்கள் தலைவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்திலிருந்தே வலியுறுத்தி வருகிறார். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

நீட் தேர்வுக்காக ஏ.கே.ராஜன் கமிட்டி போடப்பட்டுள்ளது. நீட் பிரச்சினைக்காக சட்டரீதியாக நீதிமன்றம் சென்றாலும் செல்லுபடியாகும் என்கிற உணர்வோடுதான் முதல்வர் இந்த கமிட்டியையே நியமித்துள்ளார். இதேபோன்று ஒரு நுழைவுத்தேர்வை மறைந்த திமுக தலைவர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் ரத்து செய்தோம். அதை நீதிமன்றத்திற்குச் சென்று ஆட்சேபம் தெரிவித்தார்கள்.

அன்று அப்போதைய முதல்வர் கருணாநிதி ஆனந்தக்கிருஷ்ணன் தலைமையில் குழு ஒன்றை அமைத்தார். அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மறுபடியும் நீதிமன்றம் சென்றாலும் அவர்கள் வெற்றி பெற முடியாது என்கிற அடிப்படையில் நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.

அதையே அடிப்படையாகக் கொண்டுதான் புலிக்குப் பிறந்ததது பூனையாகாது என்கிற அடிப்படையில் கருணாநிதி வழியில் ஸ்டாலின் இன்று ராஜன் கமிட்டி ஒன்றை ஏற்படுத்தியுள்ளார். அவருடைய பரிந்துரையின் அடிப்படையில் சட்டம் இயற்றப்பட்டு அது நீதிமன்றம் சென்றாலும் செல்லுபடியாகி, நீட் தேர்வு தமிழகத்தில் நுழையாமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுமோ அத்தனையையும் முதல்வர் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதே உண்மை''.

இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x